கோவில்கள்
ஸ்ரீவீழி வரதராஜப் பெருமாள் கோவில்

உன்னத வாழ்வு தரும் ஸ்ரீவீழி வரதராஜப் பெருமாள் கோவில்

Published On 2022-02-17 07:52 GMT   |   Update On 2022-02-17 07:52 GMT
சிறப்புவாய்ந்த அகில உலகங்களையும் படைத்து அளித்து காக்கும் வீழி வரதராஜப் பெருமாளிடம் தம்மை ஒப்புக்கொடுப்பாரெல்லாம் உன்னத வாழ்வு பெறுவர் என்பது உறுதி.
காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில், ஸ்ரீவீழி வரதராஜப் பெருமாள் கோவில், பார்ப்பவர்களை பக்தி பரவசப்படுத்தும் அழகிய ஐந்து நிலை மாடங்களோடு, கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

இந்த கோவில் கர்ப்பகிரகத்தில் அன்பு மலையாய், அருள் கடலாய், ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் தரிசனம் தருகின்றார் வீழி வரதராஜப் பெருமாள். விழுதி மரம் செழித்த காட்டினில் முன்னாளில் பெருமாள் கோவில் கொண்டிருந்தார். (விழுதி என்பதுதான் வீழியானது). காலவெள்ளத்தில் அக்கோவில் கரைந்திடவே, பெருமாள் அடியவர் ஒருவர் கனவில் தோன்றி, தம்மை இவ்விடத்தில் எழுந்தருள சொன்னார். அதன்படி உருவானதுதான் வீழி வரதராஜப் பெருமாள் கோவில். பெருமாள் சன்னதியின் பக்கத்தில் செங்கமலத்தாயார் சன்னதி அமைந்துள்ளது. பெருமாளுக்கு வடக்கு பார்த்த சன்னதி சர்வ வல்லப ஆஞ்சநேயர் சன்னதி கொண்டுள்ளார்.

முன்னொரு காலத்தில் அறநெறியோடு ஆட்சி புரிந்து வந்த ஒரு மன்னனுக்கு மகப்பேறு கிட்டவில்லை. இதனால் மிகவும் துன்புற்ற மன்னன், ஒரு மாமுனிவர் அறிவுறுத்தலோடு, ஸ்ரீவீழி வரதராஜப் பெருமாளை, பிள்ளை வரம் வேண்டி கண்ணீர் மல்க வேண்டினார். மன்னனின் பக்தியை கண்டு, அவருக்கு பிள்ளை வரத்தோடு எல்லா வரங்களையும் அருளினார் பெருமாள். இன்றும் பிள்ளை வரம் வேண்டுவோர், பெருமாளை உள்ளன்போடு தரிசித்து, பிள்ளை வரம் மற்றும் அனைத்து ஆசி்களையும் பெற்று செல்கின்றனர்.

இப்பெருமாள் கோவிலில் எல்லா மாதங்களும் விழா மாதங்களே. இவற்றுள் மாசிமகம் பெரு விழாவாக மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இப் பெருமாள் கோவிலில் மகா மண்டபம் 1908-ம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டது. அதன்பிறகு மடப்பள்ளி (1927), பஜனைமடம் (1942), திருகல்யாணமண்டபம்(1958), ராஜகோபுரம்(1961) உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் யாவும், பா.கி.சவுரிராஜலு செட்டியார் தலைமையிலும், அவரோடு பல்வேறு செட்டியார் பெருமக்கள் இணைந்து செயலாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு 1972-ம் ஆண்டில் திருமுழுக்கு திருப்பணி. 1991-ம் ஆண்டில் குடமுழுக்கு. சிறப்பம்சமாக 1973-ல், புதுச்சேரி மாநில அளவில் கோவில் பராமரிப்புக்காக முதல் பரிசும், 1974-ல் மாவட்ட அளவில் 2-ம் பரிசும், 1975-ல் மீண்டும் முதல் பரிசும் பெற்றுள்ளது.

இத்தகைய சிறப்புவாய்ந்த அகில உலகங்களையும் படைத்து அளித்து காக்கும் வீழி வரதராஜப் பெருமாளிடம் தம்மை ஒப்புக்கொடுப்பாரெல்லாம் உன்னத வாழ்வு பெறுவர் என்பது உறுதி. இம்மை இன்பமும், மறுமைப் பேரின்பமும் பெற ஸ்ரீவீழி வரதராஜப் பெருமாளை சரணடைவோம்.
Tags:    

Similar News