தமிழ்நாடு
குடோனில் பதுங்கிய சிறுத்தை

குடோனில் பதுங்கிய சிறுத்தை ஆரோக்கியத்துடன் உள்ளது- வனத்துறையினர் தகவல்

Published On 2022-01-21 08:25 GMT   |   Update On 2022-01-21 08:25 GMT
சிறுத்தையை பிடிப்பதற்காக அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என வனத்துறையினர் உயர்அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.
குனியமுத்தூர்:

கோவை குனியமுத்தூர் பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை கடந்த 17-ந் தேதி பி.கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் குடோனுக்குள் புகுந்தது.

தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து குடோனை வலை கொண்டு மூடினர். குடோனில் இரு நுழைவு வாயில்களிலும் கூண்டுகளை வைத்து அதனுள் இறைச்சி மற்றும் நாய்களை கட்டி வைத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் குடோனுக்குள் 6 கேமராக்களை பொருத்தி சிறுத்தையை கண்காணித்தனர். குடோனுக்குள் இருக்கும் சிறுத்தை தான் இருந்த இடத்தை விட்டு ஒவ்வொரு அறையாக சுற்றுவதும், கூண்டுகளின் அருகே வந்து விட்டு புத்திசாலித்தனமாக திரும்பி செல்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறது. நேற்று நள்ளிரவு கூட இதுபோன்று 3 முறை சிறுத்தை கூண்டின் அருகே வந்தது. கூண்டை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு திரும்பி சென்று விட்டது.

இன்று 5-வது நாளாக சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினர் இரவு பகலாக 5 நாட்கள் காத்திருந்தும், சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டியே வருகிறது.

இதனால் சிறுத்தையை பிடிப்பதற்காக அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என வனத்துறையினர் உயர்அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தை குடோனுக்குள் சென்று 5 நாட்களை கடந்து விட்டது. ஆனாலும் நாங்கள் வைத்த கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. சிறுத்தை 5 நாட்களும் சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் உள்ளது.

5 நாட்கள் சாப்பிடாவிட்டாலும் சிறுத்தை முதல் நாளில் எப்படி இருந்ததோ அதே ஆரோக்கியத்துடனும், ஆக்ரோ‌ஷத்துடனுமே இன்றும் உள்ளது. அது எந்தவித சோர்வுமே அடையவில்லை.

5 நாட்களை கடந்து விட்டதால் வேறு ஏதாவது முயற்சிகளை மேற்கொண்டு சிறுத்தையை பிடிக்கலாம் என உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடக்கிறது. அதில் சிறுத்தையை பிடிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News