செய்திகள்
ஹவுத்தி போராளிகள் நடத்திய தாக்குதலால் எழுந்த புகை மண்டலம்

சவுதி அரேபியா மீது தாக்குதல்கள் தொடரும் - ஏமன் நாட்டு ஹவுத்தி போராளிகள் மிரட்டல்

Published On 2019-09-16 15:13 GMT   |   Update On 2019-09-16 15:13 GMT
ஆளில்லா விமானங்கள் மூலம் சவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோல் உற்பத்தி மையங்களை தாக்கியதுபோல் மேலும் பல தாக்குதல்களை தொடருவோம் என ஏமன் நாட்டு ஹவுத்தி போராளிகள் எச்சரித்துள்ளனர்.
சனா:

சவுதி அரேபியாவில் அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த தாக்குதலால் சவுதியில் தினந்தோறும் 50 சதவீதம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 57 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஏமனில் இருந்து நடத்தப்பட்டதல்ல; இது ஈரான் கைவரிசை என அமெரிக்கா திட்டவட்டமாக கூறி வருகிறது.

உலகிற்கு தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய் சவுதி அரேபியாவில் உற்பத்தியாகும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலும், அதன் காரணமாக ஏற்பட்ட உற்பத்தி குறைப்பும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.



ஆனால், இந்த மாதத்துக்கான தேவையை சமாளிக்கும் அளவில் இந்திய அரசிடம் போதுமான பெட்ரோல், டீசல் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சவுதி அரேபியா மீது மேலும் பல தாக்குதல்களை தொடருவோம் என ஏமன் நாட்டு ஹவுத்தி போராளிகள் எச்சரித்துள்ளனர்.

இதுதொடர்பாக, ஹவுத்தி ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாங்கள் நினைத்த நேரத்தில் எங்களது நெடியக்கரங்கள் சவுதி அரேபியா நாட்டின் எந்த பகுதிக்கும் நீளும்’ என்பதை அந்நாட்டு அரசுக்கு உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரான் அரசின் ஆதரவுடன் ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள்மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சவுதி அரேபியா மீது சமீபகாலமாக ஹவுத்தி போராளிகள் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Tags:    

Similar News