ஆன்மிகம்
சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்

மதுரை ஆவணி மூலத்திருவிழா:சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது

Published On 2021-08-18 08:50 GMT   |   Update On 2021-08-18 08:50 GMT
மதுரை ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது. நாளை கோவிலுக்குள் பிட்டுத்திருவிழா நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது.

விழாவில் 7-ம் நாளான நேற்று காலை “வளையல் விற்ற லீலை” அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளி காட்சி அளித்தனர். அங்கு சுந்தரேசுவரர் வேடம் அணிந்த பட்டர், வளையல் விற்ற லீலையை நடித்து காண்பித்தார். பின்னர் சுவாமி தங்க பல்லக்கிலும், அம்மன் தங்க பல்லக்கிலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.

மதுரையில் சித்திரை முதல் ஆடி வரை 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும், ஆவணி முதல் பங்குனி வரை 8 மாதங்கள் சுவாமி சுந்தரேசுவரரும் ஆட்சி புரிவதாக ஐதீகம். அதன்படி மீனாட்சி ஆட்சி முடிந்து சுவாமியிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைப்பதை எடுத்துக்காட்டும் வகையில், சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் வைபவம் நேற்று இரவு நடந்தது. அப்போது சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரர் மீனாட்சியுடன் எழுந்தருளினார்.

அவருக்கு 7.45 மணிக்கு ராயர் கிரீடம் சூட்டி, ரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது. பின்னர் சுவாமியிடமிருந்து செங்கோலை பெற்று அவரது பிரதிநிதியாக மீனாட்சி கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் 2-ம் பிரகாரத்தை வலம் வந்தார். பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் சமர்ப்பித்தார். பட்டாபிஷேக கோலத்தில் சுவாமியை ஏராளமானோர் தரிசித்தனர்.

ஆவணி மூலத்திருவிழாவில் நாளை (வியாழக்கிழமை) பிட்டுத்திருவிழா நடக்கிறது. வழக்கமாக இந்த திருவிழாவின் போது சுவாமி கோவிலில் இருந்து கிளம்பி பொன்னகரம் பகுதியில் உள்ள புட்டுத்தோப்பிற்கு சென்று அங்கு பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறும். மீண்டும் சுவாமி கோவில் திரும்பும் வரை நடை சாத்தப்பட்டு இருக்கும். தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் பிட்டுத்திருவிழா முழுவதும் பக்தர்களுக்கு அனுமதி இன்றி கோவிலுக்குள்ளேயே நடைபெற இருக்கிறது. ஆனாலும் பிட்டுத்திருவிழாவை காண பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பகலில் பக்தர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 8 மணிக்கு சுந்தரேசுவரர்,, மீனாட்சி அம்மனுடன் ஆடி வீதிகளில் வலம் வந்து பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு மதியம் 1.05 மணிக்கு மேல் 1.29 மணிக்குள் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறுகிறது. பின்னர் மாலை 4 மணி மேல் நடை திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.

அது தவிர அரசின் உத்தரவின் படி வருகிற 20, 21, 22-ந் தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News