செய்திகள்
கைது

கோவையில் கல்லால் தாக்கி தொழிலாளியை கொன்ற பெயிண்டர் கைது

Published On 2020-10-21 09:06 GMT   |   Update On 2020-10-21 09:08 GMT
கோவையில் கல்லால் தாக்கி தொழிலாளியை கொன்ற வழக்கில் பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
கோவை:

சிவகங்கை மாவட்டம் வடகரையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 54). சமையல் தொழிலாளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை வந்த இவர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள தேவாலயம் அருகே பஸ்நிறுத்தத்தில் நடைமேடையில் தங்கி இருந்து கிடைத்த வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். அவர்கள் சொந்த ஊரில் வசிக்கிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் இவர் மர்ம ஆசாமியால் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணையை போலீசார் துரிதப்படுத்தினர். இதில் பாலகிருஷ்ணனை கல்லால் தாக்கி கொன்றது அதே பஸ்நிறுத்தத்தில் உள்ள நடைமேடையில் தங்கி இருந்த மதுரையை சேர்ந்த தங்கப்பாண்டி (36) என்பதும், அவர் பெயிண்டர் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

பின்னர் போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது குடும்பம் சொந்த ஊரில் உள்ளது. நான் பகலில் பெயிண்டிங் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் நஞ்சப்பாரோட்டில் உள்ள ஒரு தேவாலய பஸ்நிறுத்தத்தில் படுத்து தூங்குவேன். எனது அருகே பாலகிருஷ்ணன் படுத்து தூங்குவார். கடந்த 19-ந் தேதி நள்ளிரவு நான் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தேன். அப்போது எனது பாக்கெட்டில் இருந்த பணம் மற்றும் செல்போனை பாலகிருஷ்ணன் எடுக்க முயன்றார்.

இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நான் அருகில் கிடந்த ஒரு கல்லை எடுத்து பாலகிருஷ்ணனின் தலையில் ஓங்கி அடித்தேன். ஆனால் அவர் இறப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் இறந்துவிட்டார் என்று தெரியவந்ததும் நான் சொந்த ஊர் தப்பிச்செல்ல இருந்தேன். அதற்குள் போலீசார் என்னை மடக்கிப்பிடித்துவிட்டனர். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் தங்கப்பாண்டியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News