செய்திகள்
கோப்புப்படம்

தீபாவளி பண்டிகையன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி- கலெக்டர் தகவல்

Published On 2020-11-13 14:19 GMT   |   Update On 2020-11-13 14:19 GMT
தஞ்சை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறி உள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி திருநாள் அன்று பட்டாசு வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும்.

சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News