செய்திகள்

வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்வேன்- நாஞ்சில் சம்பத் பேட்டி

Published On 2019-02-22 11:48 GMT   |   Update On 2019-02-22 11:48 GMT
இந்த தேர்தலில் வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். #nanjilsampath #vaiko #parliamentelection

நாகர்கோவில்:

தமிழக அரசியலில் அதிரடி கருத்துக்களை தெரிவித்து அடிக்கடி பரபரப்பை கிளப்புபவர் நாஞ்சில் சம்பத். வைகோவின் ம.தி.மு.க.வில் முக்கிய நிர்வாகியாக இருந்த நாஞ்சில் சம்பத், பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். அங்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வகித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டி.டி.வி. தினகரனை ஆதரித்தார். அவர், கட்சி தொடங்கியதும் கட்சியின் பெயரில் திராவிடம் இல்லை என்று கூறி அரசியல் அரங்கில் இருந்து வெளியேறினார்.

இனி இலக்கிய மேடையில் மட்டுமே பேசுவேன் என்று கூறி வந்த நாஞ்சில் சம்பத் அவ்வப்போது அரசியல் கருத்துக்களையும் பதிவு செய்தார். இது அவர் மீண்டும் அரசியல் மேடையில் பேசுவார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாஞ்சில் சம்பத் பிரசார மேடைகளில் வலம் வர தயாராகி வருகிறார்.

வைகோ மற்றும் தி.மு.க. கூட்டணியை புகழ்ந்து பேசுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் தயாராக இருப்பதாக கூறி வருகிறார். இது தொடர்பாக நாஞ்சில் சம்பத், மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- பாராளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க- பாரதீய ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்து விட்டன. இந்த தேர்தலில் இக்கூட்டணி வெற்றி பெறுமா?

பதில்:- இப்போது நடக்கும் தேர்தல் இக்கூட்டணியின் அஸ்தமனமாக அமையும். இனி இவர்கள் வெற்றி பெற போவதில்லை.

கே:- கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இம்முறை அ.தி.மு.க. நிற்கும் தொகுதிகளே 21-க்கும் கீழ் வந்து விடும்போல் இருக்கிறதே?

ப:- அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே இதை கருதுகிறேன். அ.தி.மு.க. தென்தமிழகத்தின் கவுரவத்தை விட்டுக் கொடுத்து விட்டது.

ஜெயலலிதா, திறமையாக ஆட்சி செய்தார். கட்சியை வழி நடத்தினார். இப்போது சுரண்டி, சுரண்டி கொள்ளை அடிக்கும் நிலையே காணப்படுகிறது.

கே:- அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும் இணைந்துள்ளதே?

ப:- பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்ததால் அ.தி.மு.க.வின் தொண்டர்கள் மட்டுமல்ல, மக்களும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தின் புது வாக்காளர்கள் கோபத்தின் உச்சத்தில் உள்ளனர்.

இந்த கூட்டணிக்கு தேர்தலில் ஒருபோதும் வெற்றி கிடைக்காது. ராமதாசின் மகனுக்கு மத்திய மந்திரி பதவி பெறவே அவர் இந்த கூட்டணியில் இணைந்துள்ளார். அவரது ஆசை நிறைவேறாது.

கே:- அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அவர்கள் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவார்களா?

ப:- தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியில் சேரவே வாய்ப்புள்ளது. இங்கு சேர்ந்தால்தான் நலம் பயக்கும்.

கே:- நடிகர் கமல்ஹாசன் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவரது கட்சிக்கு தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கும்?

ப:- கமல்ஹாசன் கட்சிக்கு தேர்தலில் தொகுதிக்கு 500 வாக்குகள் கிடைக்கவே வாய்ப்புள்ளது. கமல்ஹாசன் அறிவார்ந்த அரசியல் செய்வார் என்று எதிர்பார்த்தேன். அவர், இப்படி தனக்குதானே சுவரில் போய் முட்டிக் கொள்வதன் மூலம் தன்னை தானே காயப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

திராவிடம் பற்றி கமல்ஹாசன் வாய்க்கு வந்ததை பேசுகிறார். அதை அலட்சியப்படுத்த வேண்டியது திராவிடத்தின் கடமை.

கே:- ரஜினிகாந்த் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், தனது ஆதரவு யாருக்கும் இல்லை எனவும் கூறி இருக்கிறாரே?

ப:- ரஜினியின் படங்கள் வெளிவரும் போது அவர், அரசியல் கருத்துக்கள் பேசுவார். சீன் போடுவார். படம் வெளியாகும். அது வெற்றி பெறும். அதன் பிறகு அவரும் அமைதியாகி விடுவார். அரசியல் பேச்சும் காணாமல் போய் விடும்.

ரஜினி தன்னை குழப்பி, ரசிகர்களையும் மட்டுமின்றி தமிழக மக்களையும் குழப்பி வருகிறார்.

கே:- மத்தியில் மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி அமையுமா? மோடி பிரதமராக வாய்ப்புள்ளதா?

ப:- பாரதீய ஜனதா வெற்றி பெற வாய்ப்பே இல்லை. வட இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் 3 முறை ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதா, அம்மாநில மக்களால் அகற்றப்பட்டு விட்டது.

இதுபோல சத்தீஷ்கர், ராஜஸ்தான் மாநிலங்களிலும் பாரதீய ஜனதா வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்து விட்டது. அவர் மீண்டும் பிரதமராக வாய்ப்பில்லை.

கே:- பாரதீய ஜனதா வெற்றி பெறாவிட்டால் காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா?

ப:- இந்த தேர்தலில் காங்கிரஸ் நிச்சய வெற்றி பெறும். பிரதமராக ராகுல்காந்தி பதவி ஏற்பார்.

கே:- இலங்கை தமிழர் படுகொலைக்கு காரணமானவர்கள் காங்கிரசார் என்ற பழிச்சொல் இருக்கும்போது தமிழகத்தில் அவர்களை ஆதரிக்க முன் வருவது ஏன்?

ப:- இலங்கை தமிழர் கொல்லப்பட்ட விவகாரத்தை மறக்க முடிய வில்லை என்பது உண்மைதான். அந்த பழியை துடைக்க காங்கிரஸ் முன் வந்துள்ளது. ராகுல்காந்தி இதற்கு பிரயாசித்தம் தேடுவார் என்று நம்புகிறேன்.

கே:- தி.மு.க., காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறும் நீங்கள், அவர்களை ஆதரித்து இந்த தேர்தலில் பிரசாரம் செய்வீர்களா?

ப:- தி.மு.க. பொது மேடைகளில் எனக்கு உரிய மரியாதை கொடுத்தால் அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தயாராக இருக்கிறேன்.

பாரதீய ஜனதா கட்சியை எதிர்ப்பதே எனது பிரதான இலக்கு. அ.தி.மு.க. எனது முதல் எதிரி, முக்கிய எதிரி பா.ம.க. இப்போது இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்திருப்பதால் அவர்களை எதிர்த்து பிரசாரம் செய்ய விரும்புகிறேன்.

கே:- டி.டி.வி. தினகரன் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக கூறி இருக்கிறாரே?

ப:- டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை 2 ஆக பிளப்பார். அதை தவிர வேறு எதையும் அவரால் சாதிக்க முடியாது. இந்த தேர்தலில் சந்திக்கும் வீழ்ச்சிக்கு பின்னர் அவரால் எழுந்து நிற்கவே முடியாது.

கே:- 21 தொகுதி இடைத்தேர்தல் நிலை என்னவாகும்?

ப:- 21 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும். இடைத்தேர்தல் வெற்றி மூலம் அ.தி.மு.க. ஆட்சி கவிழும். தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்பார்.


ப:- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வந்திருக்கிறது. இது வைகோவால் வந்தது. எனவேதான் அவரை பாராட்டினேன். மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் ஒரு பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு எந்தவித சமரசத்திற்கும் ஆட்படாமல், பணம் பாதாளம் வரை பாயும் என்பதை பொய்யாக்கிய முதல் தலைவராக வைகோ என் கண்ணுக்கு தெரிகிறார்.

எனவேதான் தமிழர்கள் அவருக்கு விழா எடுக்க கடமைப்பட்டு இருக்கிறார்கள் என்று கருத்து பதிவிட்டேன். இந்த தேர்தலில் வைகோவை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்யவும் தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். #nanjilsampath #vaiko #parliamentelection

Tags:    

Similar News