சிறப்புக் கட்டுரைகள்
குஷ்பு - சத்தியராஜ்

குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - எச்சில் கையால் கன்னத்தில் அடி வாங்கினேன்

Published On 2022-01-03 11:10 GMT   |   Update On 2022-01-03 11:10 GMT
நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
எனது சினிமா பயணத்தில் நான் அதிகமாக பயணித்தது சத்யராஜ் அவர்களோடுதான். இது பலருக்கு தெரியாமல் இருக்கலாம். முதன் முதலில் அவருடன் நடிகன் என்ற படத்தில் ஜோடியாக நடித்தேன். தொடர்ந்து அவருடன் மட்டும் 13 படங்கள் நடித்து உள்ளேன்.

வேறு எந்த நடிகருடனும் இவ்வளவு படங்கள் நடித்ததில்லை. நான் சத்யராஜ் அவர்களை முதன் முதலில் சந்தித்தது நடிகன் படப்பிடிப்பின் போதுதான். அப்போது எனக்கு தமிழ் அவ்வளவாக பேச வராது. அந்த தயக்கத்தின் காரணமாகவே பெரும்பாலும் எல்லோரிடமும் பழகும் போது ஒருஇடைவெளியை கடைபிடிப்பேன்.

ஆனால் சத்யராஜ் அவர்கள் எனது நிலையை புரிந்து கொண்டு எப்படியெல்லாம் எனக்கு உதவ முடியும் என்று ஒவ்வொரு தருணத்திலும் உதவினார். அதன் பிறகு நாங்கள் நல்ல நண்பர்கள் ஆகி விட்டோம்.

வெளியே பார்க்கும் சத்யராஜ் ஒருமாதிரி தெரிவார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பார்க்கும் போது சத்யராஜ் இப்படியெல்லாம் இருப்பாரா என்று நினைக்கும் அளவுக்கு மிகவும் ஜாலியாக இருப்பார்.

படப்பிடிப்பு தளத்திலேயே அனைவரையும் சிரிக்க வைப்பார். அதே நேரம் ஒவ்வொரு வருடன் எவ்வளவு நெருங்கி பழகினாலும் தன்னை சுற்றி ஒரு சுவர் எழுப்பி வைத்திருப்பார். அந்த சுவரை யாராலும் தாண்ட முடியாது. அது தான் அவருக்கு பெரு மையும் கூட.

எவ்வளவுக்கு எவ்வளவு ஜாலியாக இருப்பாரோ அதே அளவுக்கு வேலையிலும் ஈடுபாட்டோடு இருப்பார். பெரும் பாலும் எங்களது படப்பிடிப்புகள் அனைத்துமே ஊட்டி, கொடைக்கானல், கோபி செட்டிபாளையம் போன்ற பகுதிகளில் தான் நடந்தது.

படப்பிடிப்பு தளத்தில் அமர்ந்திருக்கும்போது பக்கத்தில் நான் ஒரு பெண் இருக்கிறேன் என்றெல்லாம் அவர் பார்ப்பது இல்லை. அந்த அளவுக்கு அரட்டையும், அமர்க்களமுமாக இருப்பார். அந்த நேரத்தில் யாராவது குஷ்பு அருகில் இருக்கிறார்கள் என்றால் போதும் உடனே அவளும் நம்ம ரகம்தான் என்று சர்வசாதாரணமாக சொல்லி விடுவார்.

அவரிடம் மிகவும் பிடித்த குணம் என்றால் இத்தனை படம் நடித்திருக்கிறோம். இந்த படத்தில் நம்மைவிட குஷ்புவுக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கிறதே என்றெல்லாம் ஈகோ பார்க்க மாட்டார்.

தனக்கு என்ன பாத்திரம் கொடுக்கப் பட்டதோ அதில் முழு ஈடுபாட்டோடு நடிப்பார். அதனால்தான் அவர் நடித்த படங்கள் எல்லாமே வித்தியாசமானதாகவும், தனித்துவமானதாகவும் தெரியும்.

ஒரு படத்திற்கு ஒரு படம் மாறுபாடு நிச்சயம் இருக்கும். பிரம்மா படத்தில் பார்ப்பதை போல் கல்யாண கலாட்டா படத்தில் அவரை பார்க்க முடியாது. வீர நடை படத்தில் பார்த்தது போல் வெற்றிவேல் சக்திவேல் படத்திலோ அல்லது சுயம்வரம் படத்திலோ பார்க்க முடியாது. பல படங்களின் கலவையை மலபார் போலீஸ் படத்தில் பார்க்கலாம். ரிக்ஷா மாமா மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம்.

ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட நடிப்பை பார்க்க முடிந்தாலும் பெரியார் படம் மட்டும் முற்றிலும் மாறுபட்ட படம் என்பதில் சந்தேகமே கிடையாது. ஏனெனில் நான் பெரியாரை பார்த்தது கிடையாது. போட்டோக்களில்தான் அவரது உருவத்தை பார்த்திருக்கிறேன்.

அந்த படத்தில் அவர் முழு ஈடுபாட்டோடு நடித்ததை பார்த்து நான் பிரமித்து இருக்கிறேன். அவர் தாடியும், கையில் தடியுமாக இருப்பதை பார்க்கும் போது உண்மையிலேயே இதுதான் பெரியாரோ என்று சொல்லும் அளவுக்கு அச்சு அசலாக பெரியார் போலவே இருப்பார்.

சத்யராஜ் அவர்களின் பெரியார் வேட படத்தையும், உண்மையான பெரியாரின் புகைப்படத்தையும் வைத்து நானே பார்த்து ரசித்து இருக்கிறேன். அந்த அளவுக்கு பெரியார் வேடத்துடன் ஒத்து போயிருப்பார்.

படத்துக்கு படம் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும்போதுதான் அந்த கலைஞரின் அடுத்தக்கட்ட வெற்றிப்பயணம் இருக்கும். அதற்கு நானே ஒரு சாட்சி.

பல படங்களில் பேரும், புகழும் பெற்றிருந்தாலும் குஷ்பு இந்த ரோலுக்கு ஏற்றவர் என்ற நம்பிக்கை தயாரிப்பாளருக்கும், முக்கியமாக டைரக்டருக்கும் வர வேண்டும்.

பி.வாசு அவர்களிடம் உதவி இயக்குனராக சந்திரநாத் பணியாற்றி கொண்டிருந்தார். அவரை எனக்கு தெரியும். அப் போது அடிக்கடி என்னிடம் சொல்லுவார். நான் ஏதாவது படம் எடுத்தால் நீதான் அதில் நடிக்க வேண்டும் என்பார். நானும் சரி என்று சொல்லுவேன். கடைசியில் அந்த நாளும் வந்தது.

ஆரத்தி எடுங் கடி என்ற படத்தை சந்திரநாத் இயக்க போவதாக கூறினார். அந்த படத்தில் என்னை கதாநாயகியாக நடிக்க சொன்னார். நானும் ஏற்றுக்கொண்டு நடித்தேன். அந்த படத்தில் சில காட்சிகள் உணர்ச்சிபூர்வமாக இருக்கும். அந்த காட்சிகளில் கொஞ்சம் கூட குறை இல்லாத அளவுக்கு உணர்ச்சிகரமாக நடித்திருப்பேன். பிற்காலத்தில் அந்த படத்தை வாசுசார் பார்த்த போதுதான் குஷ்புவால் உணர்ச்சிகரமாக நடிக்க முடியும் என்று நம்பி இருக்கிறார். அதனாலேயே தான் சின்ன தம்பியில் என்னைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளருடன் மல்லு கட்டி இருக்கிறார்.

எனது மாறுபட்ட நடிப்பை வாசுசார் பார்த்ததால் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தன. இப்படித்தான் வளரும் கலைஞர்கள் ஒவ்வொருவரும் அது நடிப்புத்துறையாக இருந்தாலும் சரி, திரைத்துறை சம்பந்தப்பட்ட தொழில் நுட்பங்களாக இருந்தாலும் சரி அனைத்திலும் முழு ஈடுபாட்டோடு, தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தினால் நிச்சயம் அவர்கள் வீட்டுக் கதவையும் வாய்ப்புகள் தட்டும்.

(அடுத்த வாரம் நாட்டாமையோடு வருகிறேன்.)
Tags:    

Similar News