செய்திகள்
கன்னிமாரா நூலகத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1000 புத்தகம் வழங்கினார்

மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக கிடைத்த புத்தகங்கள்- பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்களுக்கு வழங்கப்படுகிறது

Published On 2021-07-23 08:49 GMT   |   Update On 2021-07-23 16:02 GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தபோது, “செம்மொழிச் சிற்பிகள்” என்ற புத்தகம் வழங்கியது பெரும் கவனத்தை ஈர்த்தது.
சென்னை:

அரசியல் தலைவர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது பூங்கொத்து-சால்வை வழங்குவதை சம்பிரதாய நிகழ்வாக பின்பற்றி வருகின்றனர்.

ஆனால் அப்படி சம்பிரதாயமாக வழங்கப்படும் பொருட்களையும் சரித்திர நிகழ்வாக்கும் நிகழ்ச்சிக்கு வித்திட்டு வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் தன்னை சந்தித்து வாழ்த்துகூற வருபவர்கள் பொன்னாடை, பூங்கொத்துகளை தவிர்த்து அறிவுசார் புத்தகங்களை வழங்கிட வேண்டும் என்று வைத்த வேண்டுகோளை அடுத்து ஏராளமானோர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகங்கள் வழங்குகின்றனர்.

கடந்த 5 ஆண்டில் மட்டும் அவருக்கு கிடைத்த சுமார் 1 லட்சம் புத்தகங்களை தமிழகத்தில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கு வழங்கி வருகிறார்.

அவருக்கு தினமும் 50 முதல் 75 புத்தகங்கள் வரை வருவதால் அவற்றை அண்ணா அறிவாலயத்தில் உள்ள நூலகத்தில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கிறார்கள். இதனால் அங்கு ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் சேர்ந்து வருகிறது.



பள்ளி, கல்லூரிகள் உள்பட பல்வேறு நூலகங்களுக்கு புத்தகங்கள் தேவை என்று பலர் கோரிக்கை வைத்து கடிதம் அவருக்கு எழுதுகின்றனர்.

அதை ஏற்று உடனுக்குடன் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. அண்மையில் கூட எழும்பூர் கன்னிமாரா பொது நூலகத்திற்கு 1000 புத்தகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நூலக இணை இயக்குனர் கே.செல்வகுமார், துணை நூலகர் கணேஷ் ஆகியோர் அறிவாலயத்துக்கு வந்து 1000 புத்தகங்களை பெற்றுச் சென்றனர்.

பொக்ரைன் நாட்டு தமிழர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க 2000 புத்தகங்களை திருச்சி சிவா எம்.பி. மூலம் கொடுத்து அனுப்பினார்.

இதேபோல் ஒவ்வொரு கிராமப்புற நூலகங்களுக்கும் புத்தகங்களை வழங்கி வருகின்றார்.

இது மட்டுமின்றிதான் சந்திக்கும் பிரபலங்களுக்கும் அவர் புத்தகங்களை வழங்கி பெருமைப்படுத்தி வருகிறார்.

அண்மையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தபோது, “செம்மொழிச் சிற்பிகள்” என்ற புத்தகம் வழங்கியது பெரும் கவனத்தை ஈர்த்தது.

100 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, அவர்களின் நூல்கள் உள்ளிட்டவை அடங்கிய நூலை
மு.க.ஸ்டாலின்
அளித்ததின் மூலம் தமிழர் குறித்தும் தமிழரின் தேவை குறித்த பார்வையை வெளிப்படுத்தியதாக பேசப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை அவர் சந்தித்தபோது திராவிடப் பண்பாடு குறித்து ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய
‘Journey of A Civilization-Indus to vaigai’ என்ற புத்தகத்தை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கடந்த 19-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்த போது ‘‘multiple Facets of my madurai’ என்ற புத்தகத்தை வழங்கினார்.

தமிழர் வாழ்வியலின் செறிவை, புத்தகத்தின் வழியாக தலைவர்களுக்கு கொண்டு செல்லும் பணியை
மு.க.ஸ்டாலின்
செய்து வருவதாகவே பேசப்பட்டது.

‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற எழுத்தாளரும், ஓவியருமான மனோகர் தேவதாஸ் எழுதிய இந்த புத்தகம் முத்தமிழ் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் அடையாளங்களுள் ஒன்றாகும்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றிய கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்கும்போதும் மாமல்லபுரத்தின் சிற்பக்கலை நுணுக்கங்களை எடுத்துரைக்கும் புத்தகத்தை வழங்கி இருந்தார்.

இப்படி பிரபலங்களை அவர் சந்திக்கும்போது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புத்தகத்தை கொடுப்பதின் மூலம் தமிழர்களையும் தமிழ் பண்பாடு-கலாச்சாரங்களையும் பெருமைப்படுத்துவது அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.


Tags:    

Similar News