ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்

அரங்கனை தரிசனம் செய்ய செல்வது எப்படி?

Published On 2020-01-06 06:40 GMT   |   Update On 2020-01-06 06:40 GMT
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்காதர் கோவிலிலும் அவரை வழிபடுவதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் ரெங்கநாதரை தரிசனம் செய்வதற்கு என சில விதிமுறைகள் உள்ளன. நாம் அன்றாட வாழ்வில் காலையில் எழுந்து, பல் துலக்கி, குளித்து அன்றாட பணிகளை தொடங்குவதை போல் இறைவனின் திருவடியை வணங்குவதிலும் சில விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகள் ஒவ்வொரு கோவிலுக்கும் மாறுபடுவது உண்டு. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்காதர் கோவிலிலும் அவரை வழிபடுவதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன.

ஐதீகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை பொறுத்தவரை தவறிளைத்த மனதுடன் பெருமாளை தரிசிக்க சென்றால் கோபத்தில் நாம் அவர் நமக்கு கிடைக்கவேண்டிய வரங்களை தராமல் போகலாம் என்பதால் நேரடியாக பெருமாள் சன்னதிக்கு செல்லாமல் முதலில் சுற்றுப்பிரகாரங்களில் உள்ள சன்னதிகளுக்கு சென்று அங்குள்ள பகவான்களை எல்லாம் தரிசித்து விட்டு நமது கோரிக்கைகளை அவர்களிடம் வைத்துவிட்டு இறுதியாக தான் மூலவர் ரெங்கநாதர் சன்னதிக்கு செல்ல வேண்டும். அப்படி சென்றால் தான் பிரகாரங்களில் உள்ள தெய்வங்கள் நமக்காக பெருமாளிடம் இந்த பக்தன் தான் செய்த தவறுகளை தெரிவித்து விட்டான். அதனால் அவனை மன்னித்து கேட்கும் வரத்தை கொடுங்கள் என நமக்காக சிபாரிசு செய்வார்கள். அந்த சிபாரிசின்படி பெருமாள் நாம் கேட்கும் வரங்களை தருவார் என்பது ஐதீகமாக உள்ளது.

இதன்படி ஸ்ரீரங்கம் கோவிலை பொறுத்தவரை ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக உள்ளே நுழைந்ததும் முதலில் இடதுபுறம் உள்ள பலி பீடத்தையும் பிறகு கொடிக்கம்பத்தையும் தொட்டு வணங்க வேண்டும். பின்னர் கார்த்திகை கோபுரத்தை அடைந்து அங்குள்ள வாயிற்காப்பாளர்களான கங்கை, யமுனை தேவியர்களை வணங்கவேண்டும். அதன் பின்னர் வலதுபுறத்தில் உள்ள உடையவர் எனப்படும் ஸ்ரீராமானுஜர் சன்னதியை அடைந்து ராமானுஜரை மனம் உருக தரிசிக்க வேண்டும். பின்னர் சக்கரத்தாழ்வார், நம்மாழ்வார் சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு தாயார் சன்னதிக்கு சென்று ரெங்கநாச்சியாரை தரிசித்துவிட்டு சந்திர புஷ்கரணி வழியாக பெரிய கருடன் சன்னதியை அடைந்து அவரை வணங்கிவிட்டு ஆரியபடாள் வாசலை அடைந்து பின்னர் அங்கே உள்ள ஒற்றைக்கல் ஆஞ்சநேயரை வணங்கவேண்டும்.

பாதத்தை பார்க்க வேண்டும்

பின்னர் கருவூல நாச்சியார் எனப்படும் பெருமாளின் நகைகளை பாதுகாக்கும் காவலாளி நாச்சியாரை வணங்கிவிட்டு தொண்டைமான் மேட்டை அடையவேண்டும். பிறகு அருகில் உள்ள சின்னதுவாரம் வழியாக தொண்டைமான் மேட்டு கோபுரத்தை பார்க்கவேண்டும். பிறகு அங்குள்ள கிணற்றை சுற்றி பெருமாளின் தலைமை காவலரான சேனை முதலியாரை வணங்கவேண்டும். பின்னர் கிணற்றிற்கு அருகில் இருந்து கோபுர தரிசனத்தை காணவேண்டும். பின்னர் மூலவர் சன்னதிக்கு சென்று பெருமாளை வணங்கவேண்டும். கருவறையில் முதலில் பெருமாளின் பாதத்தை தான் பார்த்து வணங்க வேண்டும். பின்னர் படிபடிப்பாக அவரது மார்பு, வாய், கண், முடி, முகம் ஆகியவற்றை வணங்கி முழுமையாக தரிசிக்கவேண்டும்.

திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் ராப்பத்து நிகழ்ச்சியில் 8-ம் நாளில் திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சிக்கு தனி வரலாற்று கதை உண்டு. இதனை நினைவுபடுத்தும் வகையில் திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. சோழப்பேரரசில் தளபதியாக இருந்து பின்னர் சிற்றரசரான திருமங்கை மன்னன், பெருமாளிடம் அளவற்ற பக்தி கொண்டவர். அவர் ஸ்ரீரங்கம் கோவிலில் மதில் சுவர், கோபுரம் உள்பட பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளார்.

இந்த திருப்பணியின் போது போதுமான நிதி இல்லாமல் போனது. இதனால் திருமங்கை மன்னன் கவலை அடைந்தார். திருப்பணிகளை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என எண்ணினார். இதற்காக மன்னன் வழிப்பறியில் ஈடுபட தொடங்கினார். அதன் மூலம் கிடைக்கும் பொருளை கொண்டு திருப்பணிகளை செய்து வந்தார். ஆனால் தவறான வழியில் மூலம் கிடைக்கும் பொருளை கொண்டு தனது பக்தன் திருப்பணிகள் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த பெருமாள் எண்ணினார். இதற்காக பெருமாள் மாறுவேடத்தில் வந்தார்.

இதனை அறியாமல் திருமங்கை மன்னன், வழக்கம் போல பெருமாளையும் வழிமறித்தார். அப்போது மன்னன் காதில் ஓம் நமோ நாராயணா எனும் மந்திரத்தை ஓதினார். இதனை கேட்டதும் மன்னன் திருந்தினான். பெருமாள் ஆசியுடன் மன்னன் திருமங்கையாழ்வாராக மாறினார். ஆழ்வாராக மாறியததும் வாடினேன் வாடி என்ற பாடலை பாடினார். அவரது பாடலை கேட்டு பெருமாள் மகிழ்ச்சி அடைந்ததாக புராண வரலாறு கூறுகிறது. இந்த வேடுபறி நிகழ்ச்சி வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை நடைபெற உள்ளது. அன்றைய தினம் நம்பெருமாள் நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சேவை அளிப்பார். மேலும் மன்னன் வழிப்பறியில் ஈடுபடுவது போலவும், பெருமாள் அங்குமிங்கும் ஓடுவது போலவும் மணல்வெளியில் நடைபெறும். இதனை காண பக்தர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு வருகை தருவது உண்டு.

வேணு சீனிவாசன் அறங்காவலர் குழு தலைவர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்.
Tags:    

Similar News