செய்திகள்
சித்தராமையா

உடனே வாபஸ் பெற வேண்டும்: மின் கட்டண உயர்வுக்கு சித்தராமையா கண்டனம்

Published On 2021-06-10 04:29 GMT   |   Update On 2021-06-10 04:29 GMT
மின் வினியோக நிறுவனங்கள் நஷ்டத்தில் இருப்பதற்கு இந்த அரசின் ஊழல்களே காரணம். மாநிலத்தில் தற்போது தினமும் 30 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
பெங்களூரு :

கர்நாடக அரசின் மின் கட்டண உயர்வு முடிவுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கொரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பொது மக்கள் வேலை இல்லாமல் உள்ளனர். தொழில் நிறுவனத்தினர் உற்பத்தி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ளது. கடந்த ஓராண்டு இடைவெளியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.30 வரை அதிகரித்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை ரூ.850 ஆக அதிகரித்துள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் கஷ்டத்தில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டிய அரசு, மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. மின் கட்டண உயர்வுக்கு அரசு கூறியுள்ள காரணங்கள் மக்களின் கவனத்தை திசை திருப்புவதாக உள்ளது.

மின் வினியோக நிறுவனங்கள் நஷ்டத்தில் இருப்பதற்கு இந்த அரசின் ஊழல்களே காரணம். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தோம். மாநிலத்தில் தற்போது தினமும் 30 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆனால் இதில் பயன்படுத்தப்படுவது வெறும் 10 ஆயிரம் மெகாவாட் மட்டுமே. மொத்த மின் உற்பத்தில் மூன்றில் 2 பங்கு சூரியசக்தி மற்றும் காற்றாலை மூலம் கிடைக்கிறது. கூடுதல் மின்சார உற்பத்தி காரணமாக ராய்ச்சூரில் உள்ள அனல் மின் உற்பத்தியில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் வெளியில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?. இந்த நேரத்தில் மின் கட்டணத்தை குறைத்து, தொழில் நிறுவனங்களுக்கு உதவ வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாகவே மின் தேவை குறைந்துள்ளது. ஆயினும் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

கர்நாடக அரசு கூடுதலாக ஒரு யூனிட்டிற்கு 50 பைசா கொடுத்து மத்திய அரசிடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது. இதனால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 கோடி இழப்பு ஏற்படுகிறது.

வீணாகும் இந்த நிதியை மிச்சப்படுத்தினால், நஷ்டத்தில் உள்ள மின் வினியோக நிறுவனங்களை நிதிச்சுமையில் இருந்து மீட்க முடியும். அதனால் கர்நாடகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News