செய்திகள்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் சோதனையிட்டனர்

புதுவையில் பண்டல் பண்டலாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2021-01-12 10:49 GMT   |   Update On 2021-01-12 10:49 GMT
புதுவையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பண்டல் பண்டலாக பறிமுதல் செய்யப்பட்டது. அதனை கொண்டு வந்த 4 மினிலாரிகள், ஒரு ஆட்டோ அதிகாரிகளிடம் சிக்கியது.
புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் 50 மைக்ரானுக்கு குறைவாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சில இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக நகராட்சி அலுவலகத்திற்கு புகார் வந்தது.

இதனை தொடர்ந்து உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையில் நகராட்சி அதிகாரிகள் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர். அப்போது 100 அடி ரோட்டில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் பண்டல், பண்டலாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவை புதுவையில் இருந்து தமிழகம், கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தபோது அதில் 122 பண்டல்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து அங்கேயே வைத்து அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர் அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம், நாங்கள் வந்து சோதனை செய்யும் வரை வேறு எங்கும் அந்த பிளாஸ்டிக் பண்டல்களை கொண்டு செல்லக்கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அப்போது அங்கு மேலும் 4 மினி லாரிகள், ஒரு ஆட்டோவில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்பட்டன. இதனை பார்த்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து உழவர்கரை நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவற்றை பாதுகாப்புடன் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் அதில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

இது குறித்து சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உழவர்கரை நகராட்சி, தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்று சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் யாருக்கு சொந்தமானது, எங்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.

புதுவையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பண்டல் பண்டலாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News