செய்திகள்
இடுக்கி அணை

கேரளாவில் கனமழை நீடிப்பு- இடுக்கி அணைக்கு நீல எச்சரிக்கை

Published On 2021-10-16 05:03 GMT   |   Update On 2021-10-16 05:03 GMT
கேரளாவில் பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது.

மாநிலத்தின் மலையோர கிராமங்களில் பலத்த மழை பெய்து வருவதால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



முக்கியமான அணைகளில் இருந்து மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தின் முக்கிய அணைகளின் ஒன்றான இடுக்கி அணைக்கு வரும் வெள்ளத்தின் அளவு உயர்ந்துள்ளது. தற்போது வெள்ளத்தின் அளவு 2390.86 அடியை எட்டியுள்ளது.

இடுக்கி அணையின் மொத்த கொள்ளளவு 2403 அடியாகும். இடுக்கி அணைக்கு வரும் வெள்ளத்தின் அளவு அபாய கட்டத்தை எட்டியுள்ளதால் அங்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டால் அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையும் படியுங்கள்...இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 15,981 பேருக்கு கொரோனா: 166 பேர் பலி
Tags:    

Similar News