செய்திகள்
சட்டையை கழற்றிய எம்எல்ஏ சங்கமேஷ்

சட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.

Published On 2021-03-04 16:15 GMT   |   Update On 2021-03-04 16:15 GMT
கர்நாடக மாநிலத்தில் சட்டசபை மாண்புகளை மதிக்காமல் நடந்துகொண்ட காங்கிரஸ் எம்எல்ஏ சங்கமேஷ் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் இன்று ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான விவாதம் நடைபெற்றது. விவாதத்தை சபாநாயகர் விஷ்வேஷ்வரா ஹெக்டே காகேரி தொடங்கி வைத்து பேசியபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கை என்று கூறி முழக்கங்கள் எழுப்பினர். ஒரு கட்டத்தில், அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர்.

அப்போது, எம்எல்ஏ சங்கமேஷ் தனது சட்டையை கழற்றிவிட்டு அமளியில் ஈடுபட்டார். சட்டையை அணிந்துகொள்ளும்படி சபாநாயகர் கூறியும் அவர் கேட்கவில்லை. பின்னர் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வந்து அவரை சட்டையை அணியச் செய்தார். இந்த சம்பவம் சட்டசபையை மட்டுமின்றி அவரது கட்சியையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.

எம்எல்ஏ சங்கமேஷ் இவ்வாறு நடந்துகொண்டதால் சபாநாயகர் கடும் அதிருப்தி அடைந்தார். சபை மாண்புகளை மதிக்காமல் நடந்துகொண்ட அவரை ஒரு வாரம், அதாவது, மார்ச் 12ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 

பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த சங்கமேஷ், பாஜக அரசு தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் எதிராக ஏராளமான பொய் வழக்குகளை போட்டிருப்பதாகவும், இதை அவையின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக சட்டையை கழற்றியதாகவும் கூறினார். 
Tags:    

Similar News