செய்திகள்

பாகிஸ்தானில் மருத்துவமனையில் துப்பாக்கி சண்டை - 5 பேர் பலி

Published On 2019-06-18 19:36 GMT   |   Update On 2019-06-18 19:36 GMT
பாகிஸ்தானில் மருத்துவமனையில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் 5 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நங்கானா சாஹிப் மாவட்டத்தில் உள்ள பாகா ஷக் என்ற கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதில் இருதரப்பையும் சேர்ந்த பலர் காயம் அடைந்தனர்.

அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். மருத்துவமனையிலும் இருதரப்பினருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் உருவானது. இதில் இருதரப்பையும் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த துப்பாக்கி சண்டையில் 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து, துடிதுடித்து இறந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கி சண்டையால் மருத்துவமனையில் பதற்றமான சூழல் உருவானது. மருத்துவர்கள், நோயாளிகள் என அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மருத்துவமனையை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். உடனடியாக நங்கானா சாஹிப் மாவட்டத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. எனவே பலி எண்ணிக்கை உயரக்கூடும். 
Tags:    

Similar News