செய்திகள்
கோப்புபடம்

கொரோனா 2-ம்அலை ஓய்ந்ததையடுத்து மீண்டும் எழுச்சி பெறும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள்

Published On 2021-07-20 08:56 GMT   |   Update On 2021-07-20 08:56 GMT
திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் 200 எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இரண்டு மாதத்துக்கு தேவையான எலாஸ்டிக் இந்நிறுவனங்களிடம் இருப்பு உள்ளது.
திருப்பூர்:

கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்ததையடுத்து, திருப்பூர் பின்னலாடை துறை மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. நிட்டிங் தொடங்கி பேக்கிங் வரையிலான உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்து வகை நிறுவனங்களும் சுறுசுறுப்பாகியுள்ளன.

தேவை அதிகரிப்பால் உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்து ஆர்டர் அதிகரித்துள்ளன. குளிர் கால ஆடை தயாரிப்பு நடக்கிறது. தீபாவளி நெருங்குவதால் மேலும் அதிக ஆர்டர் கிடைக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. இந்தநிலையில் பருத்தி பஞ்சு விலை உச்சத்தை எட்டியுள்ளது ஆடை உற்பத்தியாளரை கவலை அடையச்செய்துள்ளது. நூற்பாலைகள் நூல் விலையை சீராக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள் ஆடை உற்பத்தியாளர்கள்.

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. 80 சதவீத இயக்க நிலையை எட்டியுள்ளது. ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., சலுகையை வரும் 2024 மார்ச் வரை நீட்டித்து மத்திய அரசு கைகொடுத்துள்ளது. சீன பருத்திக்கான தடையை அமெரிக்கா நீட்டித்துள்ளது. இவையெல்லாம் பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு சாதகம். எனவே அவசர கால கடன் திட்டத்தில் கூடுதல் கடன் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  

பின்னலாடை தயாரிப்புக்கு தேவையான துணி ரகங்களை தயாரித்துக்கொடுக்கிறது நிட்டிங் துறை. இறக்குமதி மற்றும் உள்நாட்டு எந்திரங்கள் மூலம் துணி தயாரிக்கப்படுகிறது. கொரோனாவுக்கு பின் நிட்டிங் நிறுவனங்கள் 85 சதவீத உற்பத்தியை அடைந்துள்ளன. இதனால் துணி உற்பத்தி அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த எந்திரங்களுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்ட சலுகைகளை தாமதமின்றி விடுவிக்க வேண்டும் என்பது இத்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

திருப்பூர் பகுதி சாய ஆலைகள் இயல்புநிலையை நோக்கி வேகமாக நகர்ந்துவருகின்றன. இத்துறை சார்ந்த தொழிலாளர் அதிகளவில் பணிக்கு திரும்பியுள்ளனர். தமிழக அரசு சாயக்கழிவுநீர் பொதுசுத்திகரிப்பு மையங்களுக்கு வழங்கிய 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடனை மானியமாக அறிவிக்க வேண்டும். பொதுசுத்திகரிப்பு மையங்களுக்கான 12 சதவீத ஜி.எஸ்.டி., வரியை ஐந்து சதவீதமாக குறைக்கவேண்டும் என்பது சாய ஆலை துறையினரின் எதிர்பார்ப்புஆகும். 

திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் 200 எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இரண்டு மாதத்துக்கு தேவையான எலாஸ்டிக்  இந்நிறுவனங்களிடம் இருப்பு உள்ளது. உள்நாட்டில் விலை அதிகாரிப்பால் எலாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து மலேசியாவில் இருந்து 40 டன் ரப்பர் இறக்குமதி செய்துள்ளன. இதன் மூலம் எலாஸ்டிக் தயாரித்து வருகின்றனர். ஆடை உற்பத்தி துறையின் இயக்கத்தை பொருத்து எலாஸ்டிக் தயாரிப்பை படிப்படியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.

காஜா பட்டன் நிறுவனங்களும் பிசியாக செயல்படுகின்றன. மூன்றாவது அலை பயத்தால் இத்துறை சார்ந்த தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்படுகிறது. 60 சதவீத தொழிலாளர்கள் வந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் காஜாபட்டன் கட்டணம் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்றுமதி, உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் கட்டண உயர்வு வழங்கி தங்களுக்கு கைகொடுக்கவேண்டும் என்பது இத்துறையினரின் எதிர்பார்ப்பு.

பின்னலாடை உற்பத்தியின் கடைசி நிலையான செக்கிங், அயர்னிங், பேக்கிங்கில் குறு, சிறு நிறுவனங்களே அதிகம் உள்ளன. உற்பத்தி செலவினங்களை குறைப்பதற்காக ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களுக்கான கட்டணத்தில் ஐந்து சதவீதம் வரை குறைப்பதாக இத்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர். வங்கி கடன், கட்டட வாடகை கழுத்தை நெரிப்பதால் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் செக்கிங், அயர்னிங், பேக்கிங் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று அத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர். 
Tags:    

Similar News