லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு சரியான பொழுதுபோக்கு பல்லாங்குழி ஆட்டம்

குழந்தைகளுக்கு சரியான பொழுதுபோக்கு பல்லாங்குழி ஆட்டம்

Published On 2020-09-24 02:58 GMT   |   Update On 2020-09-24 02:58 GMT
வீட்டுக்குள் முடங்கி இருக்கும் குழந்தைகள், பொழுதுபோக்குக்காக செல்போன்களையே நோண்டி மன அழுத்தத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனமகிழ்ச்சிக்காக பழமை வாய்ந்த பல்லாங்குழியை விளையாடலாம்.
வீட்டுக்குள் முடங்கி இருக்கும் குழந்தைகள், பொழுதுபோக்குக்காக செல்போன்களையே நோண்டி மன அழுத்தத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனமகிழ்ச்சிக்காக பழமை வாய்ந்த பல்லாங்குழியை விளையாடலாம்.

பல்லாங்குழி விளையாட்டு 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. ஆனால் பெரும்பாலும் பெண்கள்தான் அதிகம் விளையாடுகின்றனர். பல்லாங்குழி மரப் பலகை, உலோகம் போன்றவற்றால் செய்யப்பட்டு இருக்கும். பழங்காலத்தில் பாறைகளிலும், தரைகளிலும் குழிகள் பறித்து பல்லாங்குழி விளையாடி உள்ளனர்.

இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று பார்ப்போம்...

இது 2 பேர் விளையாடும் விளையாட்டு. பல்லாங்குழியில் மொத்தம் 14 குழிகள் இருக்கும். ஒருவருக்கு 7 குழிகள் என்று பிரித்து எதிரெதிரே அமர்ந்து ஆடுவார்கள். இந்த ஆட்டத்திற்கு புளியங்கொட்டை அல்லது ஏதேனும் விதைகளை காய்களாகக் கொண்டு விளையாடுவார்கள். ஒரு குழிக்கு 5 காய்கள் வீதம் நிரப்பி வைப்பார்கள்.

முதலில் ஆட்டத்தை தொடங்குபவர் தன் பக்கத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு குழியில் இருந்து காய்களை எடுத்து வலது புறமாக அடுத்தடுத்த குழிகளில் குழிக்கு ஒரு காய் வீதம் போடுவார். கையில் இருக்கும் காய்கள் முடிந்ததும், அடுத்தக் குழியில் இருக்கும் காய்களை எடுத்து தொடர்ந்து அடுத் தடுத்த குழிகளில் போட்டுக்கொண்டே வருவார். கையில் எடுத்த காய்கள் முடிந்து, அடுத்தக் குழியில் காய்கள் எதுவும் இல்லை என்றால், அதற்கு அடுத்தக் குழியில் இருப்பதை சொத்தாக எடுத்துக் கொள்வார். காலியான குழிக்கு அடுத்தக் குழியும் காலியாகவே இருந்தால் எதுவும் கிடைக்காது. பின்னர் எதிரே இருப்பவர் ஆட்டத்தை தொடர்வார்.

இவ்வாறு மாறிமாறி விளையாடிக் கொண்டு இருக்கும் போது, இடையிடையே வெற்றுக் குழியில் ஒவ்வொரு காயாக விழுந்து, 4 காய்கள் சேர்ந்தால் அந்த குழிக்குரியவர் அதனை ‘பசு’ என்று கூறி எடுத்துக் கொள்வார். சொத்து, பசு என்று எடுத்தபடியே, பல்லாங்குழியில் இருக்கும் காய்கள் காலியானதும், இருவரும் தங்களில் இருக்கும் காய்களை கொண்டு மீண்டும் குழிகளை நிரப்புவர். அப்போது ஒருவரிடம் அதிக காய்களும், இன்னொருவரிடம் குறைவான காய்களும் இருக்கும். 15 காய்கள் குறைவாக கிடைத்தது என்றால் தன்னுடைய பகுதியில் 3 குழிகளை தக்கம் என்ற பெயரில் காலியாக விட்டு விட்டு, மற்ற குழிகளில் காய்களை நிரப்பி ஆட்டத்தை தொடர்வார். தக்கம் என்ற குழியில் எதிரே விளையாடுபவர் காய்களை போட மாட்டார்.

ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப் போகிறபோது, அவர் கையில் எஞ்சி இருக்கிற காய்கள் ஒரு குழிக்குரிய 5 கூட இல்லாமல் நாலாக இருந்தால் குழிக்கு ஒரு காயை இட்டு ஆட்டம் தொடரும். அதற்கு ‘கஞ்சி காய்ச்சுதல்’ என்று பெயர். தோற்றவர் ஒரு காய் கூட இல்லாமல் நிர்கதியாகி நிற்கின்றபோது தான் ஆட்டம் முற்றுப் பெறுகிறது.

இந்த ஆட்டத்தின் மூலம் நினைவாற்றல் பெருகும். மனதை ஒருநிலைப்படுத்த முடியும். மனதில் இருக்கும் கவலைகள் மறந்து மகிழ்ச்சி பொங்கும். விரல்களால் தொடர்ந்து விளையாடும் பொழுது இரத்த ஓட்டம் அதி கரித்து, உடலும் உற்சாகமாக இருக்கும். தொடர்ந்து விளையாடும்போது பொழுது போவதே தெரியாது. உறவுகளையும் மேம்படுத்தும்.
Tags:    

Similar News