செய்திகள்
முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன்

பள்ளி மாணவி பாலியல் புகார்- முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தலைமறைவு

Published On 2020-07-29 02:09 GMT   |   Update On 2020-07-29 02:09 GMT
பள்ளி மாணவி கொடுத்த பாலியல் புகாரை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க 10-ம் வகுப்பு மாணவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் சென்று விட்டார். இதுகுறித்து மாணவியின் தாயார் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவி மற்றும் அவரை அழைத்துச் சென்ற வாலிபர் ஆகிய இருவரையும் போலீசார் மீட்டனர்.

அதன் பிறகு மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு பலர் தனக்கு பாலியல் தொல்லை செய்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். எனவே இது குறித்து குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த மாணவியிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 2017-ம் ஆண்டு நாகர்கோவில் புத்தேரியில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். இவர் நாகர்கோவில் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர், மேலும் குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கு மாணவியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதையடுத்து மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி புகார் செய்தார்.

மேலும் இதுதொடர்பாக குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாகர்கோவிலில் 15 வயது சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக 4 நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதற்கு சிறுமியின் தாயாரே உடந்தையாக இருந்துள்ளார். இதுதொடர்பாக நாகர்கோவில் புத்தேரி பகுதியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் (வயது 60), இடலாக்குடி பகுதியை சேர்ந்த பால் (66), அசோக்குமார் (43) மற்றும் கோட்டார் பகுதியை சேர்ந்த கார்த்திக் (28) மற்றும் சிறுமியின் தாயார் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் 5 பேரையும் கைது செய்ய மாவட்ட குற்ற பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் (பொறுப்பு) தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் சிறுமியின் தாயார், பால், அசோக்குமார், கார்த்திக் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான நாஞ்சில் முருகேசனை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ., மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக நாஞ்சில் முருகேசன் கட்சியின் கொள்கை மற்றும் குறிக்கோளுக்கு முரணாக செயல்பட்டதாக கூறி அவரை நேற்று முன்தினம் கட்சியில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நீக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News