செய்திகள்
காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜாவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர்

வேளாண் சட்ட மசோதாக்கள், மெல்ல கொல்லும் விஷம் - காங்கிரஸ் கட்சி ஆவேசம்

Published On 2020-09-27 23:16 GMT   |   Update On 2020-09-27 23:16 GMT
மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள வேளாண் சட்ட மசோதாக்கள் மெல்ல கொல்லும் விஷம் என்று காங்கிரஸ் கட்சி ஆவேசமாக கூறி உள்ளது.
புதுடெல்லி:

மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன.

பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயிகள் இந்த மசோதாக்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த தருணத்தில், அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜாவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கரும் காணொலி காட்சி வழியாக நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

அனைத்து கட்சிகளும் வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும். இவற்றை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இவை பெரிய வணிகர்களுக்கு விவசாயிகளை அடிமைகள் ஆக்கி விடும்.

நில எடுப்பு சட்ட மசோதாவில் எடுத்த நிலைப்பாட்டைப்போல இந்த மசோதா விவகாரத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் எதிர்க்கட்சிகளை ஆதரிக்க வேண்டும்.

இந்த மசோதாக்கள் புற்றுநோய் போன்றவை. இவை மெல்ல கொல்லும் விஷம். இது விவசாயிகளையும், விவசாயத்தையும் கொன்று விடும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் கூறும்போது, “இந்த மசோதாக்களால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறி இருக்கிறது என்றால் அது தானாக நடந்ததல்ல. விவசாயிகள்தான் இதை செய்ய வைத்துள்ளனர். அப்படி செய்யாமல் சிரோமணி அகாலிதளம் கட்சி தலைவர்கள் பஞ்சாப்பில் நுழைவது கடினம்” என குறிப்பிட்டார்.

மேலும், “முதலில் மத்திய மந்திரிசபையில் இருந்து விலகி சிரோமணி அகாலிதளம் நாடகமாடியது. அந்த கட்சி மந்திரியின் ராஜினாமா கொடுக்கப்படவில்லை. ஆனால் அது பா.ஜ.க.வால் எடுக்கப்பட்டது. அந்த கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை. ஆனால் வெளியேற்றப்பட்டது” என்றும் கூறினார்.

அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா கூறுகையில், “அரியானாவில் பா.ஜ.க.வுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டுள்ள ஜனநாயக ஜனதா கட்சி (துஷ்யந்த் சவுதாலா கட்சி), அந்த கூட்டணியில் இருந்து விலகி விவசாயிகளுடன் நிற்க துணிவிருக்கிறதா?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், துஷ்யந்த் சவுதாலா தனது கண்களை திறந்து கொண்டு, விவசாயிகளுடன் நிற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News