ஆன்மிகம்
சிவன்

இன்று மார்கழி மாத பிரதோஷ விரதம்

Published On 2019-12-23 04:38 GMT   |   Update On 2019-12-23 04:38 GMT
மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷத்திற்கு விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் அனைத்து தடைகளும் விலகி வெற்றி கிடைக்கும்.
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.

மாதந்தோறும் வளர்பிறை, தேய் பிறை திரயோதசி (13ம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.

இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும்.  நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும்.

இனி மார்கழி மாத பிரதோஷ விரதமிருப்பது பற்றிப் பார்ப்போம்.

இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.

பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம்.

முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.

நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?

மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷத்திற்கு விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் அனைத்து தடைகளும் விலகி வெற்றி கிடைக்கும்.
Tags:    

Similar News