உள்ளூர் செய்திகள்
கைது

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்- வாலிபர் கைது

Published On 2022-01-12 12:05 GMT   |   Update On 2022-01-12 12:05 GMT
திண்டிவனத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் சந்தோஷ்குமார் (வயது 29) என்பவர் அவருடைய வீட்டின் ஒரு அறையில் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் 1½ டன் (1,500 கிலோ) ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே சந்தோஷ்குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், திண்டிவனம் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை அரவை மில்லில் கொடுத்து மாவாக்கி வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து விழுப்புரம் நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர். பின்னர் சந்தோஷ்குமாரை, போலீசார் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News