செய்திகள்
பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் வெளியே வந்த போது எடுத்த படம்.

பிளஸ்-1 மாணவருக்கு கொரோனா: ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை

Published On 2021-09-24 14:54 GMT   |   Update On 2021-09-24 14:54 GMT
ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் பாலமுருகன்நகர் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவர் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். அவருக்கு திடீரென உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு, நெசல் துணை சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாணவரின் குடும்பத்தாருக்கும், விண்ணமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவரின் சகோதரிக்கும், மேலும் சுப்பிரமணிய சாஸ்திரியார் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

இதையடுத்து ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி, ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுதா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவர் படிக்கும் பள்ளிக்கு நேற்று முதல் நாளை (சனிக்கிழமை) வரை 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

பின்னர் பள்ளியை தூய்மைப்படுத்த நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பள்ளியில் பணியாற்றி வரும் ஒரு ஆசிரியருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News