செய்திகள்
கோப்புபடம்

கியாஸ் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-09-15 12:54 GMT   |   Update On 2021-09-15 12:54 GMT
கியாஸ் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:

நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் விமலா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மாலா, ஒன்றிய பொருளாளர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய கமிட்டி உறுப்பினர் அமிர்தம் கலந்து கொண்டு பேசினார்.

100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி தினக் கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். 100 நாள் வேலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை கைவிடவேண்டும். 100 நாள் வேலையை நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் விரிவுப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் விரைவில் செலுத்தவேண்டும். கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ.7,500 வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

இதேபோல திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கியாஸ் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கஸ்தூரி தலைமை தாங்கினார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் லதா கலந்து கொண்டு பேசினார்.

இதில் மாதர் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி, ராஜேஸ்வரி, வளர்மதி, அமுதா, புஷ்பலதா உள்பட மாதர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாதர் சங்க நிர்வாகி அம்பிகா நன்றி கூறினார்.

100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும், 100 நாள் வேலையை பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய செயலாளர் வெண்சங்கு தலைமை தாங்கினார். இதில் சங்க மாவட்ட தலைவர் சுபாதேவி, ஒன்றிய தலைவர் வசந்தா, ஒன்றியக்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News