செய்திகள்
கனிமொழி

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி உடையும் - கனிமொழி எம்.பி பேச்சு

Published On 2021-04-01 08:12 GMT   |   Update On 2021-04-01 08:12 GMT
மக்களை ஏமாற்றி வரும் அ.தி.மு.க , பா.ஜ.க கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும் என திமுக மாநில மகளிரணி செயலாளர் கூறியுள்ளார்.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தி.மு.க மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,

நத்தத்தில் தி.மு.க வேட்பாளர் அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்கவேண்டும். மிகவும் பின்தங்கிய பகுதியான இங்கு அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும். தமிழகத்தில் 23 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். அவர்களுக்கு தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

அ.தி.மு.க-பா.ஜ.க முரண்பட்ட கூட்டணி ஏற்பட்டுள்ளது. இது தேர்தலுக்குபின் கண்டிப்பாக உடையும். தோல்விக்கு ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தி கொள்வார்கள். வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக முதல்வருக்கு அந்த பிரச்சினை தற்போதுதான் தெரியவந்துள்ளது.

மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக கூறுகிறார். மக்களை ஏமாற்றி வரும் அ.தி.மு.க , பா.ஜ.க கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும்.


பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் 250-க்கும் மேற்பட்டபெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் குற்றம் செய்தவர்களை பாதுகாக்கவே இந்த அரசு முயல்கிறது. தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் இச்சம்பவம் தொடர்பாக தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

தி.மு.க தலைவர் கருணாநிதி விவசாயிகளுக்காக ரூ.7000கோடி கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டார். அதேபோல அமையவுள்ள தி.மு.க அரசும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. அதனை கண்டிப்பாக நிறைவேற்றும். 100 நாள் வேலைதிட்டம் 150 நாளாக மாற்றப்பட்டு அவர்களுக்கான கூலியும் உயர்த்தி வழங்கப்படும். பெண்கள் இனி டவுன்பஸ்சில் இலவசமாக பயணம் செய்யலாம். ஜூன் 3-ம்தேதி கருணாநிதி பிறந்தநாள் அன்று கொரோனா நிவாரண நிதி ரூ.4000 வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படும். தமிழகத்தில் 3½ லட்சம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

Similar News