சிறப்புக் கட்டுரைகள்
சர்ப சித்தருக்கு பூஜை செய்யும் திருவடி சித்தர்

சென்னை சித்தர்கள்: ஸ்ரீ சர்ப சித்தர்-மாங்காடு- 72

Published On 2022-04-16 06:27 GMT   |   Update On 2022-04-16 06:27 GMT
சென்னை மாங்காடு பகுதிக்கு வந்ததாக குறிப்புகள் உள்ளன. 108 சிவலிங்கங்களை வைத்து இவர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது. அவர் ஐக்கிய மானதும் அவர் வசித்த இடத்திலேயே ஜீவ சமாதி செய்துள்ளனர்.

திருக்குவளை அருகில் உள்ள கொளப்பாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் திருவடி சித்தர். சென்னை வந்து மாங்காட்டில் குடியேறி தொழில் செய்த இவர் ஜெயந்தி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தார். இவருக்கு 1999-ம் ஆண்டு சர்ப சித்தரின் அருள் கிடைத்தது.

கனவு மூலம் சர்ப சித்தர் இவரை தொடர்பு கொண்டு அசரீரியாக பல்வேறு தகவல்களை கூறினார். சர்ப சித்தர் என்பவர் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படுபவர். காளஹஸ்தியில் இவர் வாழ்ந்ததாக சொல்கிறார்கள்.

இறுதி காலத்தில் இவர் சென்னை மாங்காடு பகுதிக்கு வந்ததாக குறிப்புகள் உள்ளன. 108 சிவலிங்கங்களை வைத்து இவர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது. அவர் ஐக்கிய மானதும் அவர் வசித்த இடத்திலேயே ஜீவ சமாதி செய்துள்ளனர். இந்த நிலையில் முன்பொரு காலத்தில் கடுமையான இயற்கை சீற்றம் ஏற்பட்டு மாங்காடு பகுதியில் கடும் அழிவு ஏற்பட்டு இருக்கிறது.

ஊர்கள் அனைத்தும் அழிந்துள்ளன. இதனால் சர்ப சித்தர் வாழ்ந்த இடமும் வயல் வெளியாக மாறிப்போனது. என்றாலும் சர்ப சித்தர் சமாதியாகி இருந்த இடத்தில் மட்டும் ஒருவித அமைதி நிலவி இருக்கிறது. இது பின்னாளில் வந்த யாருக்கும் தெரியாது.

ஆனால் அந்த இடத்தில் தான் இருப்பதை வெளிப்படுத்திக்கொள்ள சர்ப சித்தர் முடிவு செய்தபோது அவர் தேர்வு செய்த நபர்தான் திருவடி சித்தர். அவரை சித்தர் அடிகளார் என்று மக்கள் அழைக்கும் அளவுக்கு சர்ப சித்தர் மாற்றியுள்ளார். முதலில் சர்ப சித்தர் பற்றி திருவடி சித்தருக்கு எதுவும் தெரியாது.

கனவில் தோன்றி காட்சியளித்த சர்ப சித்தர் மாங்காட்டில் தற்போது பட்டூர் கோவிந்த ராஜ் நகர் என்று அழைக்கப்படும் பகுதியில் தான் இருப்பதாக தெரிவித்தார். தன்னை வெளியில் கொண்டுவந்து பூஜைகள் நடத்தும் படி உத்தரவிட்டார். இதையடுத்து சர்ப சித்தர் குறிப்பிட்ட பகுதிக்கு திருவடி சித்தர் சென்று பார்த்தார்.

அந்த பகுதி ஆன்மிக பெரியவர்களும் அவருடன் சேர்ந்து ஆய்வு செய்தனர். அங்கே உயரமான லிங்க வடிவில் ஒரு பெரிய கல் கிடைத்தது. அதை அந்த பகுதி மக்கள் ‘பூதக்கல்’ என்று சொல்லி வந்தனர். அந்த கல்லை பார்த்து பயந்து ஒதுங்கினார்கள். ஆனால் உண்மையில் அது சர்ப சித்தரின் அடையாளம் என்பதை அவர்கள் உணர வில்லை.

பூதக்கல் என்று அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு செல்லும்போது பாம்புகள் சீறும் ஓசை கேட்டதாக சொல்கிறார்கள். அதனால் அந்த கல் இருக்கும் பகுதிக்கு பயந்துபோய் மக்கள் செல்வதில்லை. அந்த கல் தான் சர்ப சித்தரின் இருப்பிடத்தை அடையாளம் காட்டியது.

கனவிலும் சர்ப சித்தர் அந்த கல்லை பற்றி குறிப்பிட்டு இருந்தார். இதனால் திருவடி சித்தரும் அவருடன் இணைந்த சித்தர் ஆர்வலர்களும் அந்த கல் இருந்த பகுதியை சுத்தம் செய்தனர். அந்த கல் பஞ்ச பூதங்களை கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்த கல் என்பதை உணர்ந்தனர். ஒருவித லிங்க வடிவத்துடன் அந்த கல் அமைந்துள்ளது.

அந்த பெரிய கல்லின் இடது புறத்தில் பிறை வடிவம் உள்ளது. வலது பக்கத்தில் சூரியன் வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. மத்திய பகுதியில் யோக சக்கரம் இடம்பெற்றுள்ளது. அதன் அருகிலேயே பிரணவ மந்திரமும் காணப்படுகிறது.

பஞ்ச பூதங்களை இந்த கல் கட்டுப்படுத்தும் என்பதை உணர்த்தும் வகையில் அதன் மீது 5 தலை நாகம் போன்ற அமைப்பு செதுக்கப்பட்டுள்ளது. வடக்கு திசை நோக்கிய நிலையில் அந்த கல் கண்டெடுக்கப்பட்டது. எனவே சர்ப சித்தர் வடக்கு நோக்கி சமாதி அடைந்துள்ளார் என்று முடிவு செய்துள்ளனர்.

பூதக்கல் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்தில் திருவடி சித்தர் பூஜைகளை தொடங்கினார். பிறகு அதை சுற்றி சிறிய கீற்றுக் கொட்டகை அமைக்கப்பட்டு அந்த கல்லுக்கு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டன. அந்த கல்லையே சர்ப சித்தரின் பிரதிபிம்பமாக வணங்கி வருகிறார்கள்.

ஆனால் சர்ப சித்தர் தன் அருகில் அவ்வளவு எளிதில் யாரையும் சேர்த்துக்கொள்ள வில்லை. திருவடி சித்தருக்கு அவர் கொடுத்த சோதனைகள், வேதனைகள் ஏராளம். பல்வேறு கடுமையான சோதனைகளையும் தாங்கிக் கொண்டே திருவடி சித்தர் சர்ப சித்தரின் வழிபாடுகளை செய்து வந்தார்.

இந்த நிலையில் ஒரு நாள் அசரீரியாக திருவடி சித்தரிடம் சில தகவல்களை சர்ப சித்தர் கூறினார். இந்த தலத்துக்கு வருபவர்களுக்கு அருள்வாக்கு கூறலாம். ஆனால் எந்த காரணத்தை கொண்டும் யாரிடமும் எந்த யாசகமும் கேட்கக்கூடாது என்று நிபந்தனைகள் விதித்தார். அதோடு தன்னை பற்றி விளம்பரம் செய்யக்கூடாது என்றும் சர்ப சித்தர் உத்தரவிட்டார்.

இந்த 2 நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்ட திருவடி சித்தர் சர்ப சித்தர் காட்டிய வழியில் வழிபாடு முறைகளை நடத்தத்தொடங்கினார். அந்த தலத்தை நாடி வருபவர்களுக்கு அருள்வாக்குகளையும் சொன்னார். அவை அனைத்தும் பலித்தன. இதையடுத்து அந்த இடத்தில் சர்ப சித்தருக்கு ஆலயம் உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அந்த பகுதி மக்கள் சித்தருக்கு கோவில் கட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் அதையும் மீறி கோவில் கட்டப்பட்டது. கடந்த 1999-ம் ஆண்டு ஆலயம் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு சர்ப சித்தரை தேடி வரும் மக்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

அந்த ஆலயத்துக்கு சர்ப சித்தர் ஆதிஜீவ பீடம் என்று பெயரிட்டுள்ளனர். இங்கு சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தன்று மகா குருபூஜை நடத்தப்படுகிறது. ஞாயிறுதோறும் ராகுகால பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது. 11 வாரம் விளக்கேற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்கிறார்கள்.

நிறைய பக்தர்களுக்கு சர்ப சித்தரே கனவில் சென்று வயதான தோற்றத்தில் காட்சியளித்து இந்த தலத்துக்கு வரவழைத்த அற்புதங்களும் நடந்துள்ளன. பெரும்பாலான ஜீவசமாதிகளின் கருவறை பகுதிக்குள் செல்ல இயலாது. ஆனால் சர்ப சித்தர் ஜீவசமா தியில் மகா சிவ ராத்திரி தினத்தன்று அனைவரையும் கருவறைக்குள் செல்ல அனுமதிக்கபடுகிறார்கள். அன்று ஒவ்வொரு பக்தரும் தங்கள் கையால் சர்ப சித்தருக்கு அபிஷேகம் செய்யலாம்.

3 நிலை ராஜ கோபுரத்துடன் இந்த ஜீவ பீடம் உருவாக்கப்பட்டுள்ளது. யாரிடமும் உதவி பெறாமலேயே பவுர்ணமி தோறும் இங்கு அன்னதானம் நடந்து வருகிறது. ஆலய வளாகத்தில் புற்றும் இருக்கிறது. இதனால் சித்தர் அடிகளார் சொல்லும் வாக்குகள் சர்ப சித்தரின் அருளால் அப்படியே பலிப்பதாக சொல்கிறார்கள்.

சர்ப சித்தர் பற்றி முழுமையான உண்மையான தகவல்கள் யாருக்கும் தெரியவில்லை. மிகப்பெரிய குறிப்புகளோ, ஆவண பதிவுகளோ கிடைக்கவில்லை. அவர் தரும் தகவல்கள் மட்டுமே வெளியில் வந்துள்ளன. அதன் அடிப்படையில் சர்ப சித்தர் தன்னை நாடி வரும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்து வழிகாட்டுவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஜீவ பீடத்துக்கு வருபவர்களுக்கு தோ‌ஷங்கள் விலகுவதாக சொல்கிறார்கள். அதுமட்டுமின்றி சகல கிரக பீடை விலகவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. மேலும் கல்வி, குழந்தை பேறு, திருமணம் கைகூட, நோய்களை குணமாக்க, திருஷ்டிகளை நீக்க, பித்ருக்கள் சாபம் நீங்கவும் இங்கு வழிபாடு செய்யலாம்.

சிலருக்கு முன்னோர்கள் சாபம் அல்லது மகான்கன் மூலம் சாபம் ஏற்பட்டு இருக்கலாம். இதனால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு அடிக்கடி பிரச்சினைகள் வந்து செல்லும். இத்தகைய நிலையில் இருப்பவர்களும் இங்கு வந்து பயனடைவதாக சொல்கிறார்கள்.

குறிப்பாக இந்த ஜீவ பீடத்தில் உள்ள பூதக்கல் சர்ப சித்தரின் மறுவடிவமாக கருதப்படுகிறது. இந்த பூதக்கல் பல்வேறு சூட்சமங்களை தன்னகத்தே கொண்டது. இதன் அருகில் அமர்ந்து தியானம் செய்பவர்களுக்கு சர்ப சித்தரின் அருள் அலைகள் பெருகி வருவதை அதிர்வுகள் மூலம் உணர முடியும். இந்த ஜீவ பீடத்தில் சர்ப சித்தர் ஆழ்ந்த தவ நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள். அவரது அருள் ஒருவருக்கு முழுமையாக கிடைத்து விட்டால் இந்த பிறவியில் தேவையான அனைத்து பலன்களையும் அவர் கிடைக்க செய்வார் என்று சொல்லப்படுகிறது. சிலர் இந்த தெய்வீக அனுபவத்தை பெற்று இருக்கிறார்கள்.

சராசரி மனிதர்கள் பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சர்ப சித்தரிடம் வேண்டுகோள் வைப்பது உண்டு. அவர்களது முன் வினைகளுக்கு ஏற்ப சர்ப சித்தரின் உதவி கிடைக்கிறது. வெகு சிலர் தான் தங்களது ஆத்ம பலத்தை மேம்படுத்திக்கொள்ள சர்ப சித்தரின் உதவியை நாடுகிறார்கள். அத்தகைய கோரிக்கையுடன் வரும் பக்தர்களுக்கு நல்ல ஆன்ம பலத்தை கொடுத்து அருளாசி வழங்க சர்ப சித்தர் தவறுவதில்லை.

இந்த தலத்தில் ஞாயிறு தோறும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை 9 எலுமிச்சை பழங்கள் மூலம் 18 விளக்குகள் ஏற்றும் சிறப்பு பரிகார பூஜைகள் நடக்கிறது. 11 வாரம் தொடர்ந்து செய்தால் சுபிட்சம் உண்டாகும் என்கிறார்கள். பவுர்ணமி தோறும் சித்தர் யாக பூஜை, அமாவாசை தோறும் ஆத்ம மோட்ச லிங்கத்துக்கு பூஜை நடத்துகிறார்கள்.

இங்குள்ள பைவரர் சித்தருக்கு அஷ்டமி திதியில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. தினமும் காலை 7.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் 2 கால பூஜை நடத்தப்படுகிறது. இது குறித்து திருவடி சித்தர் கூறுகையில், ‘உலக மக்கள் அனைவரும் நலமாக இருக் கவே சித்தர்கள் விழிப்புணர்வு செயல்களை தருகிறார்கள். அதை சரியாக பின்பற்ற வேண்டும். தியானம், நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அந்த இரண்டையும் இந்த ஜீவ பீடத்தில் நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம் என்றார். யாரிடமும் யாசகம் பெறாமல் சர்ப சித்தருக்கு பூஜைகள் நடத்தி வரும் திருவடி சித்தர் வாசி யோகம் மூலம் தினமும் தன்னால் இயன்ற உதவிகளை ஏழை, எளியவர்களுக்கு செய்கிறார்.

அடிக்கடி சர்ப சித்தர் மூலம் தெருவோர வாசிகளுக்கு அன்னதானம் வழங்குகிறார். இன்று (சனிக்கிழமை) 23-வது மகா குருபூஜையையும் சர்ப சித்தர் நடத்தி வைத்துள்ளார். சர்ப சித்தர் தொடர்பாக மேலும் தகவல்களை திருவடி சித்தரிடம் 73584 38673 மற்றும் 97898 26263 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.

Tags:    

Similar News