செய்திகள்
திருட்டு

தக்கலையில் பட்டப்பகலில் இறைச்சி கடையில் நூதன முறையில் ரூ.38 ஆயிரம் திருட்டு

Published On 2021-11-24 13:48 GMT   |   Update On 2021-11-24 13:48 GMT
தக்கலையில் இறைச்சி கடையில் நூதன முறையில் ரூ.38 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பத்மநாபபுரம்:

தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி கரும்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜான் சத்தியராஜ் (வயது 46). இவர் தக்கலை பேட்டை சந்தை சாலையில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் மதியம் காரில் 2 வாலிபர்கள் வந்தனர்.

அவர்களில் ஒருவர் காரில் இருந்து இறங்கி இறைச்சி கடைக்கு சென்று, ‘நான் இத்தாலி நாட்டை சேர்ந்தவன்’ என ஆங்கிலத்தில் பேசினார். அத்துடன் ரூ.500-க்கு சில்லறைகளை கொடுத்து விட்டு 500 ரூபாய் நோட்டு கேட்டார். உடனே, ஜான்சத்தியராஜ் மேஜையை திறந்து அங்கு இருந்த பணத்தில் இருந்து ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்தார். இதை அந்த வாலிபர் நோட்டமிட்டு கொண்டிருந்தார்.

தொடர்ந்து அந்த வாலிபர் ஒரு சிறிய கோழியை இறைச்சியாக வெட்டி கொடுக்கும்படி கேட்டார். அதன்படி ஜான்சத்தியராஜ் ஒரு சிறிய கோழியை எடைப்போட்டு இறைச்சியாக வெட்டத்தொடங்கினார்.

இறைச்சியை வெட்டி முடித்த பின்பு திரும்பி பார்த்த போது அந்த வாலிபரை காணவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த ஜான் சத்தியராஜ் கடையில் இருந்த மேஜையை திறந்து பார்த்த போது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.38 ஆயிரத்தையும் காணவில்லை. பணத்தை அந்த வாலிபர் திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த வாலிபர் இறைச்சி கடையின் உள்ளே புகுந்து பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வாலிபரை தேடி வருகிறார்கள். மேலும், அந்த வாலிபர் வெளிநாட்டை சேர்ந்தவரா? அல்லது வடமாநில நபரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News