ஆன்மிகம்
மலைக்கோவில்

பெரிய கோவில்கள் திறக்கப்படுவது எப்போது?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2020-08-29 05:44 GMT   |   Update On 2020-08-29 07:33 GMT
5 மாதங்களாக தரிசனத்திற்கு மறுக்கப்பட்டுள்ள பெரிய கோவில்களை திறப்பது எப்போது? என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு கடந்த மார்ச் 26-ந்தேதி முதல் தடைவிதிக்கப்பட்டது. அதேநேரத்தில் கோவில்களில் அர்ச்சகர்கள் மூலம் பூஜைகள் நடந்து வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள சிறிய கோவில்கள், அதாவது 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோவில்கள், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களில் மட்டும் பொது மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதன்படி, கடந்த 1 மாதத்திற்கும் மேலாக கிராமப்புற கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பெரிய கோவில்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. திருப்பதி கோவில் உட்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய கோவில்கள் திறக்கப்பட்டு சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கேரளமாநிலத்தில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் மாநில அரசு பெரிய கோவில்களில் தரிசனத்துக்கு அனுமதிக்கவில்லை.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு நீட்டித்த ஊரடங்கு இம்மாத இறுதியுடன் (31-ந் தேதி) முடிவடைய உள்ளது. கிராமப்புற கோவில்களை திறக்க அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் பெரிய இந்து கோவில்கள், மசூதிகள், தேவாலயங் களை திறக்க வேண்டும் என்றும், அரசு கட்டுப்பாடுகளை கடைபிடித்து தரிசனம் செய்ய தயாராக இருப்பதாக பக்தர்கள் தரப்பு எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

ஏற்கனவே, பெரிய கோவில்களில் ஆகம விதிப்படி பூஜைக்கும், கோவில் விழாக்களை வழக்கம்போல நடத்தவும் தடையில்லை. அதே வேளையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இன்றி திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இன்றைய தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள், இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வதா? நீட்டிப்பதா? என்றும், பெரிய கோவில்களில் இதுவரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்ததில் தளர்வு செய்யலாமா? என்ற உறுதியான நிலைப்பாடு எடுக்கப்பட உள்ளது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில் திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை ஆன்மிக ஸ்தலம் என்றே சொல்லலாம். பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர், திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில், பஞ்சவர்ணசுவாமி கோவில், நாச்சியார் கோவில், வயலூர் முருகன் கோவில் உள்ளிட்டவை உள்ளன. இக்கோவில்கள் செப்டம்பர் 1-ந் தேதி முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கி இருக்கிறது.

இதுதொடர்பாக பக்தர்கள் கூறுகையில், ‘ஊரடங்கு தளர்வு தமிழ்நாட்டில் பெரிய கோவில்களை தவிர அனைத்துக்கும் கொடுக்கப்பட்டு விட்டது. கடந்த 5 மாதமாக பெரிய கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பூட்டப்பட்ட கோவில் வாசலில் நின்று கற்பூரம் ஏற்றி வழிபட்டு வருகிறோம். இதர மாநிலங்களில் கோவில் தரிசனம் சமூக இடைவெளியை கடைபிடித்து செயல்பட்டு வருகிறது. இதுபோல இ-பாஸ் நடைமுறையும் கிடையாது. தமிழகத்தில் மட்டுமே இ-பாஸ் நடைமுறை தொடர்கிறது.

அரசுக்கு வருவாய் ஈட்டக்கூடிய டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி அளித்த அரசு, பக்தர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, பெரிய கோவில்களை வழிபாடு செய்து சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்திட அனுமதிக்க வேண்டும்‘ என்றனர். தமிழகத்தில் பெரிய கோவில்களை எப்போது திறக்கலாம் என்பது தொடர்பாக அரசின் அறிவிப்பிற்காக அறநிலையத்துறையும் காத்திருக்கிறது.
Tags:    

Similar News