செய்திகள்
மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிப்பு -முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2021-10-23 14:17 GMT   |   Update On 2021-10-23 14:17 GMT
பொதுமக்கள் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தீபாவளி பண்டிகையையொட்டி பொது இடங்களில் கூட்டத்தை தவிர்ப்பது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் இன்று (23-10-2021 ) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15.11.2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

பண்டிகைக் காலங்களில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் மட்டுமே பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகை நாட்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும், மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
Tags:    

Similar News