செய்திகள்
மம்தா பானர்ஜி

கலவரப் பகுதிக்கு செல்லும் கவர்னர் மரபுகளை மீற வேண்டாம்- மம்தா பானர்ஜி ஆவேசம்

Published On 2021-05-13 06:32 GMT   |   Update On 2021-05-13 06:32 GMT
வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களையும், அங்கிருந்து வெளியேறி அசாமில் தஞ்சம் அடைந்துள்ள மக்களையும் நேரில் சந்திக்க உள்ளதாக மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப்தன்கர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்றார். அவர் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றினார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ஜனதாவால் மேற்கு வங்காளத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. இந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு அங்கு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது.

வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களையும், அங்கிருந்து வெளியேறி அசாமில் தஞ்சம் அடைந்துள்ள மக்களையும் நேரில் சந்திக்க உள்ளதாக மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப்தன்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஏற்பட்ட வன்முறை சம்பங்களால் பாதிக்கப்பட்ட கூச்பெகர் பகுதியில் உள்ள மாத்தபங்கா, சீத்தல்குச்சி, தின்காட்டா உள்ளிட்ட இடங்களை இன்று நேரில் பார்வையிட உள்ளேன்.

வன்முறை சம்பவம் காரணமாக மாநிலத்தில் இருந்து வெளியேறி அசாமின் ரன்பக்லி, ஸ்ரீராம்பூர் பகுதிகளில் உள்ள முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளவர்களை வெள்ளிக்கிழமை சந்திக்க உள்ளேன்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

அசாமின் துப்ரி மாவட்டத்தில் ரன்பக்லி, கோக்ராஜான் மாவட்டத்தில் ஸ்ரீராம்பூரும் உள்ளன. இந்த இரு பகுதிகளும் மேற்கு வங்காளத்திற்கு அருகில் உள்ளன.

இந்த நிலையில் கலவர பகுதிக்கு கவர்னர் நேரில் செல்வதற்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆவேசம் அடைந்து கவர்ன க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மம்தா பானர்ஜி கூறி இருப்பதாவது:-

தாங்கள் (கவர்னர்) தன்னிச்சையாக முடிவு செய்து கலவரப்பகுதிக்கு செல்வதாக அறிந்தேன்.

அவ்வாறு தாங்கள் செய்வது நீண்ட காலமாக நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளுக்கு புறம்பானது. மரபுகளை மீற வேண்டாம். எனவே கள ஆய்வு தொடர்பாக திடீர் முடிவுகளை எடுப்பதை தாங்கள் தவிர்க்க வேண்டும்.

அதோடு மாநில அரசு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு உத்தரவு பிறப்பதையும் தாங்கள் கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News