செய்திகள்
நடுவட்டம் வனப்பகுதியில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்களை படத்தில் காணலாம்.

கூடலூர் மலைப்பாதையில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்

Published On 2020-09-15 06:06 GMT   |   Update On 2020-09-15 06:06 GMT
கூடலூர் மலைப்பாதையில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
கூடலூர்:

மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக நீலகிரி உள்ளது. இங்கு அரிய வகை தாவரங்கள், மரங்கள், மூலிகை செடிகள் வளருகிறது. குறிப்பாக நீலகிரி, கொடைக்கானல் மலைப்பிரதேசங்களில் குறிஞ்சி செடிகள் உள்ளது. ஆசிய நாடுகளில் 200 வகையான குறிஞ்சி செடிகள் இருக்கிறது. இதில் 150 வகையான செடிகள் இந்தியாவில் மட்டுமே உள்ளது. அதுவும் குறிப்பாக நீலகிரி, கொடைக்கானல் மலைகளில் 30-க்கும் மேற்பட்ட குறிஞ்சி செடிகள் உள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர், நடுவட்டம், டி.ஆர். பஜார் மலைப்பாதையில் நீலநிற குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. ‘ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த குறிஞ்சி மலர்களின் இதழ்கள் ஊதா நிறத்திலும், உள்பகுதி வெள்ளை நிறத்திலும் காணப்படுகின்றன.

பொதுவாக இது நீலக்குறிஞ்சி என அழைக்கப்படுகிறது. மலைப்பாங்கான பள்ளத்தாக்குகள் மற்றும் பாறை இடுக்குகளில் நீல நிற குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்குவதை பொதுமக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:- கடல் மட்டத்தில் இருந்து 1,300 முதல் 2,400 மீட்டர் உயரத்தில் குறிஞ்சி செடிகள் வளருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தன்மை உடையவை. குறிஞ்சி மலரில் ஏராளமான வகைகள் உள்ளது. 3, 7, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் செடிகளும் உள்ளது. குறிஞ்சி மலர்கள் பூக்கும் காலத்தை கொண்டு நீலகிரி மலைப்பிரதேசத்தில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் தங்களது வயதை கணித்து உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News