ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ‘சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டது

Published On 2020-01-06 03:16 GMT   |   Update On 2020-01-06 03:28 GMT
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை ‘சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் ‘கோவிந்தா’ கோ‌‌ஷம் எழுப்பி சொர்க்கவாசல் வழியாக நுழைந்து மூலவர், உற்சவரை தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக நடக்கிறது. அதையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு கோவிலின் நடை திறக்கப்பட்டு, மார்கழி மாத கைங்கர்யம், பூஜைகள் செய்யப்பட்டது. கோவிலில் திருப்பாவை பாசுரம் பாடப்பட்டது. அதைத்தொடர்ந்து தோமால சேவை, கொலு, பஞ்சாங்க சிரவணம் ஆகியவை முடிந்ததும், அதிகாலை 2 மணியளவில் மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை பாராயணம் செய்ய, ‘பரமபத வாசல்’ எனப்படும் ‘சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டது.

உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை அலங்கரித்து தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருள செய்தனர். கோவில் ஊழியர்கள் தங்களின் தோள்களில் சுமந்தபடி, உற்சவர்களை முதலில் சொர்க்கவாசல் வழியாகக் கொண்டு வந்து, தங்க வாசலில் பக்தர்கள் வழிபடும் வகையில் வைத்தனர். பின்னர் அதிகாலை 3 மணியில் இருந்து 5 மணிவரை குறைந்த எண்ணிக்கையில் வி.ஐ.பி. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து அதிகாலை 5 மணியில் இருந்து இலவச தரிசனத்தில் சாதாரணப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். கோவில் சாமி தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏடுகொண்டல வாடா.. வெங்கடரமணா கோவிந்தா.. கோவிந்தா.. ஏழுமலைவாசா ஏகஸ்வரூபா கோவிந்தா.. கோவிந்தா.. அனாதரட்சகா ஆபத் பாந்தவா கோவிந்தா.. கோவிந்தா.. என விண்ணை முட்டும் அளவுக்கு பக்தி கோ‌‌ஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் தங்கத்தேரோட்டம் நடக்கிறது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வருகின்றனர். மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணிவரை சகஸ்ர தீபலங்கார சேவை நடக்கிறது. அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் தங்கத் திருச்சி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இரவு 8.30 மணியில் இருந்து 9.30 மணிவரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் ஆத்யாயன உற்சவம் நடக்கிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) துவாதசி விழா நடக்கிறது. அதையொட்டி அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிவரை கோவிலுக்கு அருகில் உள்ள ஸ்ரீவாரி பு‌‌ஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடி குளிப்பதற்கும், பாவங்களை தீர்ப்பதற்கும் உரிய தூய்மையான தீர்த்தமான ஸ்ரீவாரிபு‌‌ஷ்கரணியில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழாவையொட்டி கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News