செய்திகள்
கோப்புப்படம்

தகுதியான பெண்கள் மானியத்தில் ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் சாந்தா தகவல்

Published On 2020-11-29 08:20 GMT   |   Update On 2020-11-29 08:20 GMT
திருவாரூர் மாவட்டத்தில் தகுதியான பெண்கள் மானியத்தில் ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் 2020-21-ம் நிதியாண்டில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் உழைக்கும் பெண்களுக்கு மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தில் தகுதியான பெண்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதற்கான தகுதி 18 வயது முதல் 45 வயதிற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத நலவாரியங்களில் பதிவு பெற்ற பெண்கள், தனியார் நிறுவனங்கள், சிறுதொழில், அரசு திட்டங்களில் பணிபுரியும் பெண்கள், ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள், தொகுப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வங்கி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரியும் பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர் ஆவர்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பங்களை அலுவலக வேலை நாட்களில் தங்கள் பகுதிக்குட்பட்ட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இலவசமாக பெற்று கொள்ளலாம். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்திலும் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News