செய்திகள்
டெல்லியில் காற்று மாசுபாடு

டெல்லி காற்று மாசு சென்னைக்கும் பரவுமா? - வானிலை ஆய்வு மையம் விளக்கம்

Published On 2019-11-04 06:50 GMT   |   Update On 2019-11-04 06:50 GMT
டெல்லி காற்று மாசுவினால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறி உள்ளார்.
சென்னை:

நாட்டின் தலைநகரமான டெல்லி வாகன புகை மற்றும் புழுதி படலங்களால் ஏற்கனவே காற்று மாசடைந்த பகுதியாக உள்ளது.

இந்த நிலையில் அதன் அருகில் உள்ள பஞ்சாப், அரியானா மாநிலங்களில் அறுவடை முடிந்து அதன் கழிவுகளை தீயிட்டு அழித்து வருகிறார்கள்.

இந்த புகை மாசு காற்றில் பரவி டெல்லிக்குள் ஊடுருவி உள்ளது. இதன் காரணமாக டெல்லியில் காற்று மிகவும் மோசமாக மாசடைந்து இருக்கிறது.

அதாவது காற்று மாசு புள்ளிகளின் அடிப்படையில் இதன் விகிதம் 500 ஆக உள்ளது. இது சாதாரணமாக காற்றில் உள்ள மாசுவை விட 5 மடங்கு அதிகம் ஆகும். அங்கு நிலைமை மிக மோசமாக இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வானவீதியிலும் இது பரவி இருப்பதால் தரைப்பகுதியை துல்லியமாக பார்க்க முடியவில்லை. இதனால் விமானங்கள் கூட தரையிறங்க முடியாத நிலையில் திருப்பி விடப்பட்டுள்ளது.

இந்த மாசு இனி டெல்லி மட்டுமல்லாமல் மற்ற பகுதிகளுக்கும் காற்றில் பரவும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பரவும் மாசு காற்று சென்னை வரை பரவும் என்று பிரபல தனியார் வானிலை கணிப்பு நிபுணர் பிரதீப்ஜான் கூறியிருக்கிறார்.

அவர் சமூக வலைதளத்தின் மூலம் வெளியிட்ட தகவலில் அடுத்த வாரத்தில் டெல்லி மாசு கிழக்கு கடற்கரை வரை பரவும். அப்போது அது சென்னைக்கும் வர உள்ளது. அதாவது மாசு புள்ளிகள் 200-லிருந்து 300 வரை சென்னையை எட்டும்.

இதன் காரணமாக வானத்தில் புழுதி படலங்கள் காணப்படும். தெளிவாக பார்க்க முடியாத அளவுக்கு வானம் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

இதில் நாசா வெளியிட்டுள்ள செயற்கைகோள் படத்தையும் ஆதாரமாக வெளியிட்டுள்ளார்.



ஆனால் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரனிடம் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

டெல்லி இங்கிருந்து மிக நீண்ட தூரத்தில் உள்ளது. அங்கிருந்து மாசு இங்கு வரை வருவதற்கு வாய்ப்பு இல்லை. பூமத்தியரேகையில் இருந்து நாம் 8-லிருந்து 12 டிகிரி அட்சரேகையில் இருக்கிறோம்.

ஆனால் டெல்லி 30 டிகிரி அட்சரேகையில் இருக்கிறது. அவ்வளவு தூரம் பயணம் செய்து சென்னைக்கு வருவதற்கு வாய்ப்பே கிடையாது. மேலும் கிழக்கு மற்றும் வடகிழக்கில் இருந்து மேகக்கூட்டங்கள் திரண்டு வந்து தமிழக பகுதியை சூழ்ந்து இருக்கின்றன. தொடர்ந்து அவை பயணித்து வருகின்றன.

டெல்லியில் இருந்து வரும் மாசுவை அவை தடுத்துவிடும். டெல்லி காற்று மாசுவினால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதியாக கூற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னாள் தலைவர் ராஜ் கூறும்போது, தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கிழக்கில் இருந்தும், வடகிழக்கில் இருந்தும், தென்கிழக்கில் இருந்தும் மேகக்கூட்டங்கள் தொடர்ந்து பரவி வருகின்றன. அவை கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணித்து வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் இருந்து சென்னைக்கு காற்று மாசு வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறினார்.

Tags:    

Similar News