செய்திகள்
சுதாகரன்

சுதாகரனின் கோரிக்கை ஏற்றது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்: எந்நேரத்திலும் விடுதலையாக வாய்ப்பு என தகவல்

Published On 2020-12-17 08:55 GMT   |   Update On 2020-12-17 08:55 GMT
சுதாகரனின் கோரிக்கையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றது. இதனையடுத்து அவர் எந்நேரத்திலும் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேர் கர்நாடக மாநில பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

சசிகலா சிறைக்கு வந்த புதிதில் மனவருத்தத்துடன் யாருடனும் பேசாமல் ஒதுங்கி இருந்தார். நாளடைவில் இயல்பு நிலைக்கு திரும்பிய அவர் சிறை ஊழியர்கள், சக கைதிகளுடன் சகஜமாக பழகினார்.

கல்வி கற்காத கைதிகளுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள், சிறைக்கு வருவார்கள். அவர்களிடம் கன்னடம் எழுதுவது, படிப்பதை கற்ற சசிகலா, அதன் மூலம் கன்னட மொழித் தேர்வில் 3-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவர், சிறை அறை ஒன்றில், சிறியதொட்டிகளில் காளான் வளர்த்துள்ளார். தோட்டத்தில் தர்ப்பூசணி வளர்த்து, பணமும் சேர்த்துள்ளார். இதே சிறையில் உள்ள அவரது உறவினர் இளரவசியும் கன்னட மொழி கற்றுள்ளார்.

விடுமுறை மற்றும் நன்னடத்தை காரணமாக சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று அவரது வக்கீல்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது தண்டனை காலம் முடிந்து ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்பட இருக்கிறார். இந்த தகவலை கர்நாடக சிறைத்துறை ஏற்கனவே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவித்து உள்ளது.

இதனிடையே சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆண்டுகள் தண்டனை காலம் முடிவடைகிறது.

சசிகலா, இளவரசி 2 பேரும் விசாரணை கைதியாக 33 நாட்கள் சிறையிலிருந்தார்கள். அந்த 33 நாட்கள் மற்றும் சசிகலா 2 முறை பரோலில் சென்ற 17 நாட்கள் கழித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளது என்கின்றன சிறைத்துறை வட்டாரங்கள்.

அதே வேளையில் இளவரசி 5 நாள் பரோலில் வந்ததைக் கழித்தால் பொங்கலுக்கு முன்பு விடுதலை ஆவதற்கான‌ வாய்ப்புகளும், சுதாகரன் சுமார் 4 மாதம் காலம் சிறையிலிருந்ததைக் கழித்தால் இந்த மாதத்திலும் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளது.

எனினும் சுதாகரன் அபராத தொகை கட்டியது தாமதமானதால் அவரது விடுதலை தாமதமாக ஜனவரி முதல் வாரத்தில் இருக்கும் என்கின்றன சிறைத்துறை வட்டாரங்கள். இதன் மூலம் சசிகலாவுக்கு முன்பாக சுதாகரன், இளவரசி விடுதலை ஆகி விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சொத்து வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய சுதாகரனின் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றது. ஏற்கனவே 92 நாட்கள் சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டி, சுதாகரன் மனு அளித்து இருந்தார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சுதாகரன் எந்நேரத்திலும் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News