செய்திகள்

கருங்கோழிக்கு சொந்தம் கொண்டாடும் மத்தியபிரதேசம் - சத்தீஸ்கர்

Published On 2018-03-19 10:48 GMT   |   Update On 2018-03-19 10:48 GMT
இரும்புச்சத்து அதிகம் இருக்கும் கருங்கோழிக்கு உரிமை கோரி மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்கள் புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
போபால்:

ஒவ்வொரு பகுதியிலும் பரம்பரையாக இருக்கும் பொருட்கள் அல்லது உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இதற்கான பதிவு அலுவலகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள பாரம்பரிய பொருட்களை புவிசார் குறியீடாக பதிவு செய்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் கருங்கோழிக்கு உரிமை கொண்டாடி மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் புவிசார் குறியீடு பெறுவதற்கு முயற்சி செய்து வருகின்றன.

கடாக்நாத் என்று அழைக்கப்படும் இந்த கருங்கோழி இறைச்சி உணவிலேயே மிகவும் சத்தானது ஆகும். இதில் கொழுப்பு சத்து குறைவு. அதே நேரத்தில் இரும்பு சத்தும், ஏராளமான ஊட்டச்சத்தும் அதில் அடங்கி உள்ளன.

எனவே இதை மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதன் விலையும் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் இந்த வகை கோழிகளை வளர்க்கிறார்கள். அதே நேரத்தில் இவை மத்தியபிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவை என்று கூறப்படுகிறது.

இதனால் கருங்கோழிக்கு புவிசார் குறியீடு கேட்டு 2012-ம் ஆண்டு ஜபுவாவில் செயல்படும் கிராமின் விகாஷ் டிரஸ்டி என்ற அமைப்பு சென்னை புவிசார் பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்தது.

தற்போது சத்தீஸ்கர் மாநிலம் கருங்கோழி எங்கள் மாநிலத்தில் பூர்வீகமாக கொண்டது. எனவே எங்களுக்குத்தான் புவிசார் குறியீடு வேண்டும் என்று விண்ணப்பித்திருக்கிறது. இதனால் புவிசார் குறியீட்டை பெறுவதற்கு இரு மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News