செய்திகள்
கோப்பு படம்.

நிவர் புயல் பலத்த காற்று- சென்னையின் பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்

Published On 2020-11-25 14:53 GMT   |   Update On 2020-11-25 14:53 GMT
நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையின் பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 தினங்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் நீர் திறந்து விடப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 5000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மீட்பு மற்றும் கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அடையாறு ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், வரதராஜபுரம், திருமுடிவாக்கம், ஆதனூர், மேற்கு தாம்பரம், பொழிச்சலூர், பம்மல், நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், அனகாபுத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட 20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக சென்னை மாநகரமே ஸ்தம்பித்திருக்கிறது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்துள்ளது. 

சென்னையில் பலத்த காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கையாக சென்னையின் பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News