செய்திகள்
பால் குழாய் வழியாக விநியோகம் செய்யப்படுவதை படத்தில் காணலாம்

கொரோனா பரவலால் வீட்டில் இருந்து குழாய் மூலம் பால் விற்பனை செய்யும் வியாபாரி

Published On 2021-05-17 10:00 GMT   |   Update On 2021-05-17 10:00 GMT
பால் வாங்க வருபவர்கள் பணத்தை கதவின் அருகில் வைத்தால், அவர்களுக்கு தேவையான பால் குழாய் வழியாக விநியோகம் செய்யப்படும்.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தினசரி 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

சித்தூர் மாவட்டத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சமூக இடைவெளி குறித்து அலட்சியமாக இருந்து வந்த மக்கள், இறப்பு விகிதம் அதிகரிக்க தொடங்கியதும், பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்க தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் சித்தூர் மாவட்டம் மதனபள்ளியை சேர்ந்த பால் வியாபாரி சுதாகர் என்பவர் சற்று வித்தியாசமான முறையில் பால் கொள்முதல் மற்றும் விற்பனையை நடத்தி வருகிறார்.

தனது வீட்டின் தலைவாசல் முன்பு 2 பெரிய குழாய்களை பொருத்தி அதை மூடியிடப்பட்ட பிளாஸ்டிக் டிரம்களில் இணைத்துள்ளார்.

அதில் ஒன்று கால்நடை விவசாயிகள் கறந்த பாலை ஊற்றவும், மற்றொன்று பால் தேவைப்படுவோர் பால் பெற்றுக் கொள்ளவும். பாலின் அளவை அறிய எடை பார்க்கும் கருவியும் பொருத்தி உள்ளார்.

பால் வாங்க வருபவர்கள் பணத்தை கதவின் அருகில் வைத்தால், அவர்களுக்கு தேவையான பால் குழாய் வழியாக விநியோகம் செய்யப்படும்.

இதன் மூலம் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படுவதுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க பால் வியாபாரி செய்த இந்த வழிமுறை பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கொரோனா தொற்றுப் பரவலை கட்டுக்குள் கொண்டு வர சித்தூர் மாவட்ட கிராம மக்கள் பலர் விவசாயி நிலங்களில் தஞ்மடைந்துள்ளனர். தெலுங்கானாவில் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டதும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள உயரமான மரத்தில் ஏறி தங்கி உள்ளார்.

தற்போது மதனபள்ளியில் பால் வியாபாரியின் சமூக இடைவெளி ஏற்பாடு இவையனைத்தும் மக்களின் விழிப்புணர்வை சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது.

Tags:    

Similar News