செய்திகள்
கொள்ளை

அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் கம்பெனி சூப்பர்வைசர் வீட்டின் ஜன்னலை உடைத்து நகை கொள்ளை

Published On 2021-09-18 10:56 GMT   |   Update On 2021-09-18 10:56 GMT
அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் கம்பெனி சூப்பர்வைசர் வீட்டின் ஜன்னலை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை:

கோவை வேடப்பட்டியை அடுத்த நாகராஜபுரம் அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்தவர் குட்டிசாமி (வயது 44). இவர் தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது வீட்டின் அருகே வசித்துவரும் முருகன் என்பவர் குட்டிசாமிக்கு போன் செய்து வீட்டின் கதவு திறந்து இருப்பதாக கூறினார்.

இதைகேட்ட அவர் உடனே வீடு திரும்பினார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 13¼ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து குட்டிசாமி வடவள்ளி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து வீட்டின் ஜன்னலை உடைத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களை தேடி வந்தனர்.

அப்போது அவரது வீட்டுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்த வெள்ளலுரை சேர்ந்த விவேக் (30) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் தண்ணீர் கேன் சப்ளை செய்ய வந்த போது வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்துகொண்டு ஜன்னலை கதவை உடைத்து கொள்ளை அடித்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் விவேக்கை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News