செய்திகள்
சென்னை ரிப்பன் மாளிகையில், வரைவு வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆர்.லலிதா வெளியிட்ட காட்சி.

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயார் - மாநகராட்சி கமிஷனர் தகவல்

Published On 2019-10-04 21:25 GMT   |   Update On 2019-10-04 21:25 GMT
சென்னை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர்(பொறுப்பு) ஆர்.லலிதா தெரிவித்தார்.
சென்னை:

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வரைவு வாக்காளர் பட்டியலை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர்(பொறுப்பு) ஆர்.லலிதா அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் அடிப்படையில், 200 வார்டுகள் வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு ஏற்றார் போல் வரைவு வாக்காளர் பட்டியல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகத்திலும், 200 வார்டு அலுவலகத்திலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

வாக்காளர்கள் தங்களது பெயர் விவரங்கள் சரியாக உள்ளதா என சரி பார்த்துக்கொள்ளலாம். மேலும் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் செய்துகொள்ளலாம். வார்டுகள் வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து வாக்காளர்களின் பெயர் எந்த வார்டில் வந்துள்ளது என தெரிந்துகொள்ளலாம்.

உள்ளாட்சி தேர்தலுக்கு சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 5 ஆயிரத்து 714 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் வாக்காளர்களுக்கு என 78 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்கு என 78 வாக்குச்சாவடிகளும், அனைத்து வாக்காளர்களுக்கும் 5 ஆயிரத்து 558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 57 லட்சத்து 97 ஆயிரத்து 652 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த பட்சமாக ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள வார்டு 159-ல், 2 ஆயிரத்து 921 பேரும், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 10-ல் உள்ள வார்டு 137-ல், 54 ஆயிரத்து 801 வாக்காளர்கள் உள்ளனர். தொடர்ந்து பெயர் சேர்க்கை மற்றும் திருத்தம் நடைபெற்று வருகிறது. அது முடிவடைந்த பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்படும்.

இதுவரை சென்னைக்கு, கர்நாடகா மற்றும் பீகாரில் இருந்து 43 ஆயிரம் வாக்கு எந்திரங்கள் வந்துள்ளன. இறுதி வாக்காளர் பட்டியலுக்கு பின்னர் கூடுதலாக வாக்கு எந்திரங்கள் தேவைப்பட்டால், தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெற்றுக்கொள்வோம். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News