லைஃப்ஸ்டைல்

குழந்தைகள் வளரும் வீடு எப்படி இருக்க வேண்டும்

Published On 2019-06-13 06:03 GMT   |   Update On 2019-06-13 06:03 GMT
சத்துள்ள உணவு, சுகாதாரத்தைப் பராமரிப்பது, பெற்றோரின் அரவணைப்பு இவற்றுடன் ஆரோக்கியமான குழந்தையை வளர்க்க வீட்டு சூழல் முக்கியப்பங்கு வகிக்கிறது.
‘‘குழந்தை வளர்ச்சியில் வீட்டு சூழல் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த ஆரம்பகட்டத்தில்தான் குழந்தையின் மனமும், உடலும் வளர்ச்சியடைகிறது. அதனால் வீட்டு சூழலிலும் கவனம் செலுத்துவதும் அவசியமான ஒன்று. முதலில் குழந்தைகள் வளரக்கூடிய வீடு இரைச்சல்கள் இன்றி அமைதியாக இருக்கவேண்டும்.

சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பது முக்கியம். குழந்தையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக குழந்தைக்கு எட்டும் தூரத்தில் கண்ணாடி பொருட்களோ, மின்சார வயர் போன்றவையோ, தண்ணீர் தொட்டியோ இருக்கக்கூடாது. மாத்திரை, மருந்துகளை குழந்தைகள் கண்ணில் படும்படி வைக்காமல் இருப்பதும் அவசியம்.

குழந்தை பிறந்து 2 வயதுக்குள் 80 சதவீதம் மூளை வளர்ச்சி அடைந்துவிடும். அதன் பிறகு 8 வயதுக்குள் மூளை முழுமையாக வளர்ச்சி அடைந்துவிடும். இந்த காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். செல்போன், லேப்டாப், தொலைக்காட்சி போன்ற எலெக்ட்ரானிக் விளையாட்டு பொருட்களைக் கொடுத்து குந்தைகளைப் பழக்கப்படுத்தக் கூடாது. இது குழந்தையுடைய மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். இந்த எலெக்ட்ரானிக் பொருட்களால் குழந்தைகளுக்கு ஹைப்பர் ஆக்டிவ் பாதிப்புகள் வருவதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

குழந்தையைத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டு பாடும் பழக்கம் நம் கலாசாரத்தில் உண்டு. இதன் பின்னால் சில அறிவியல் காரணங்கள் உள்ளது. தாலாட்டால் குழந்தையின் செவித்திறனும், மன வளர்ச்சியும் மேம்படும் வாய்ப்பு அதிகம். தாயுடன் உணர்வுப்பூர்வமான அன்பும் இதனால் உருவாகும்.

அதேபோல், குழந்தைக்கு முன்பு புத்தகம் வாசிப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது போன்ற நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிப்பது அவசியம். இதன்மூலம் நம்முடைய நல்ல பழக்கங்கள் குழந்தைகளின் மனதிலும் ஆழப்பதியும்.

இவற்றுடன் வீட்டின் உள்புற வடிவமைப்பிலும் முடிந்தால் கவனம் செலுத்தலாம். கண்ணுக்கு இதம் தரும் வண்ணங்களில் பெயின்ட் அடிப்பது, பொம்மை படங்கள் வரைந்து வைப்பது, பூக்களால் அலங்கரிப்பது, பூந்தொட்டிகள் வைப்பது போன்றவை குழந்தையின் மனதை குதூகலப்படுத்தும். வீட்டின் செல்லப்பிராணிகளான நாய், பூனை, ஆடு போன்ற பிராணிகளோடு விளையாட விடும்போது வேறு உயிர்களின் அறிமுகமும் குழந்தையின் அறிவை வளர்ப்பதற்கு உதவும்.

ஆனால், அதன் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாம் கண்காணிப்பதற்கும் மறக்க வேண்டாம். மேலும், குழந்தைகளுக்காக பாடுவது, குழந்தைகளுக்குக் கதை சொல்வது, விளையாடுவது, குழந்தைகளோடு பேசுவது, குழந்தையை வீட்டுக்குள்ளே பொத்தி வைக்காமல் அவர்களுக்கு வெளி உலகத்தை அறிமுகப்படுத்துவது, சக குழந்தைகளோடு அவர்களை விளையாடும் சூழலை உருவாக்குவதும் அவசியம்.
Tags:    

Similar News