ஆட்டோமொபைல்
சென்னையில் மின்சார ஆட்டோ திட்டம் துவக்கம்

சென்னையில் மின்சார ஆட்டோ திட்டம் துவக்கம்

Published On 2019-11-29 15:23 GMT   |   Update On 2019-11-29 15:23 GMT
சென்னையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்ட மின்சார ஆட்டோக்களை முதல் அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.



வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிறமுதலீட்டாளர்களிடமிருந்து தமிழ் நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளைப் ஈர்த்திடவும், நவீன தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகியநாடுகளுக்கு முதல்- அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் குழுவினர் அரசு முறைப் பயணம் மேற்கொண்டனர். 

இந்த பயணத்தில் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 35,520-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். இப்பயணத்தின் நிறைவாக, துபாயில், இந்தியத் துணைத் தூதரகம் மற்றும் தொழில் தலைவர்கள் கூட்டமைப்பு ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர் சந்திப்பில், பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச் சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 5,000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், துபாயின் கே.எம்.சி. குழுமம் மற்றும் எம். ஆட்டோ எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.



இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்தும் விதமாக, நிறுவனத்தால் பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு மாசுவிளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்களாக மாற்றியமைக்கப்பட்டு, முதற்கட்டமாக சென்னையில் 100 மின்சார ஆட்டோக்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கும் அடையாளமாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று மின்சார ஆட்டோக்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த மின்சார ஆட்டோக்களை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்வதன் மூலம் சுமார் 100 கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆட்டோக்களில் சிசிடிவி கேமரா, ஆபத்து பொத்தான் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆட்டோக்களை பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ள முடியும். பெரும்பான்மையான மின்சார ஆட்டோக்களின் ஓட்டுநர்கள் பெண்கள், மற்றும் திருநங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News