செய்திகள்
வங்காளதேசம் அணி வீரர்கள்

இந்தியாவை வீழ்த்தி முதன்முறையாக U19 உலக கோப்பையை கைப்பற்றியது வங்காளதேசம்

Published On 2020-02-09 16:26 GMT   |   Update On 2020-02-09 16:26 GMT
இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக முன்னேறிய வங்காளதேசம், இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது.
13-வது ஜூனியர்  (19 வயதுக்கு உட்பட்டோர்)  உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் நடைபெற்றது.  இதில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா 47.2 ஓவரில் 177 ரன்கள் எடுத்து சுருண்டது. தொடக்க பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 121 பந்தில் 88 ரன்கள் அடித்தார். வங்காளதேச அணியின் அவிஷேக் தாஸ் 3 விக்கெட்டும், ஷொரிபுல் இஸ்லாம், ஹசன் சாகிப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. பர்வேஸ் ஹொசைன் எமோன், தன்சித் ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடினர். இதனால் வங்காளதேசம் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த அணி 8.5 ஓவரில் 50 ரன்கள் எடுத்திருக்கும்போது தன்சித் ஹசன் 17 ரன்கள் எடுத்த நிலையில் ரவி பிஷ்னோய் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஹசன் ஜாய் (8), தவ்ஹித் ஹிரிடோய் (0), ஷகாதத் ஹொசைன் (1) ஆகியோரை கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வீழ்த்தினார். 85 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது. அத்துடன் சிறப்பாக விளையாடிய எமோன் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.

இதனால் போட்டி இந்தியாவுக்கு சாதகமாக திரும்பியது. அந்த நிலையில்தான் வங்காளதேசம் அணியின் கேப்டன் அக்பர் அலி இறங்கினார். அவர் நிலைத்து நின்று விளையாடினார். வங்காளதேசம் 102 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.

7-வது விக்கெட்டுக்கு மீண்டும் அக்பர் அலியுடன் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறிய எமோன் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார். இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. அந்த வேளையில் எமோன் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது வங்காளதேசம் 143 ரன்கள் எடுத்திருந்தது.

7-வது விக்கெட்டுக்கு அக்பர் அலி- எமோன் ஜோடி 41 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணிக்கு இது முக்கியமாக அமைந்தது. அத்துடன் போட்டி மீண்டும் வங்காளதேசம் கைக்கு மாறியது.

8-வது விக்கெட்டுக்கு அக்பர் அலியுடன் ரகிபுல் ஹசன் ஜோடி சேர்ந்தார். ரபிபுல் ஹசனை ஒரு பக்கம் வைத்துக் கொண்டு அக்பர் அலி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

வங்காளதேசம் அணிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை குறுக்கீட்டது. அப்போது வங்காளதேசம் 41 ஓவரில் 163 ரன்கள் எடுத்திருந்தது. மழை நின்றதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது வங்காளதேசம் அணிக்கு  வெற்றிக்கு 46 ஓவரில் 170 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் 7 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் மீண்டும் விளையாடியது.

ஆட்டம் தொடங்கியதும் 7 பந்தில் 7 ரன்கள் எடுத்து வங்காளதேசம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அக்பர் அலி 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு துணையாக இருந்தார்.
Tags:    

Similar News