தமிழ்நாடு
கொலை

கும்மிடிப்பூண்டி அருகே தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்

Published On 2022-01-22 03:51 GMT   |   Update On 2022-01-22 03:59 GMT
கும்மிடிப்பூண்டி அருகே குடிபோதையில் தம்பியை கோடாரியால் வெட்டி கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்னமல்லி கிராமத்தை சேர்ந்தவர் தனலட்சுமி. இவருக்கு முனுசாமி (வயது 45), சுப்பிரமணி (43), முத்து (38), சுரேஷ் (32) என மொத்தம் 4 மகன்கள் உள்ளனர். இதில் சுரேசுக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

சுப்பிரமணிக்கு திருமணமாகி குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை பிரிந்து தனது தாய் வீட்டின் அருகே உள்ள ஒரு குடிசையில் பல வருடங்களாக தனியாக வசித்து வருகிறார்.

சுரேஷ் மட்டும் தனது தாய் தனலட்சுமியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். சுரேசும், அவரது அண்ணன் சுப்பிரமணியும் கட்டிட தொழிலாளர்கள். 2 பேரும் ஒன்றாக கட்டிட வேலைகளுக்கு சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணி, கட்டிட வேலைக்கு தம்பி சுரேசை அழைக்காமல் வேறு சிலரை அழைத்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் இரவு தாய் தனலட்மி, அண்ணன், தம்பி 2 பேருக்கும் உணவு அளித்து உள்ளார். உணவு சாப்பிடும் போது தன்னை ஏன் வேலைக்கு அழைத்து செல்லவில்லை என அண்ணன் சுப்பிரமணியத்திடம் தம்பி சுரேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மோதாலாக மாறி உள்ளது. மேலும் சுப்பிரமணியத்தை கோபத்தில் அடித்த தம்பி சுரேஷ், அவரது சாப்பாட்டு தட்டை தட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணன் சுப்பிரமணி சாப்பிடாமல் அங்கிருந்து கோபமாக வெளியே சென்று விட்டார்.

ஏற்கனவே குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் சுப்பிரமணிக்கு, தனது தாய் வீட்டில் சாப்பிடும் போது தம்பி சுரேஷ் வம்புக்கு இழுத்தது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

தனது தம்பியின் மீது கடுமையான கோபத்தில் இருந்த சுப்பிரமணி, இரவில் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவரை ஆத்திரம் தீர கோடாரியால் வெட்டினார். இதில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி சுரேஷ் மயக்கம் அடைந்தார்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சுரேசை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பியை கொலை செய்த அண்ணன் சுப்பிரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News