செய்திகள்
ஹத்ராஸ் இளம்பெண் தகனம் செய்யப்பட கொண்டு செல்லும் காட்சி

சிபிஐ விசாரணை நடைபெற்றுவரும் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை ஹைகோர்ட் கண்காணிக்கும் - உச்சநீதிமன்றம் உத்தரவு

Published On 2020-10-27 08:32 GMT   |   Update On 2020-10-27 08:32 GMT
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அந்த விசாரணையை அலகாபாத் ஹைகோர்ட் கண்காணிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14-ம் தேதி புல் அறுக்க சென்ற 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்லால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 

பாலியல் கொடுமைக்கு உள்ளானதால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளம்பெண் செப்டம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உயிரிழக்க காரணமான குற்றத்திற்காக சந்தீப் சிங், ராமு சிங், ரவி சிங் மற்றும் லவ்குஷ் சிங் என்ற 4 உயர்வகுப்பை சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ பல நபர்களிடம் பல்வேறு கட்டமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் மற்றும் அது தொடர்பான விசாரணை விவகாரத்தில் உத்தரபிரதேச அரசு மீது பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகிறது.

இதையடுத்து, ஹத்ராஸ் வழக்கை உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு மாற்ற வேண்டும் எனவும், இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நியாயமான விசாரணையை நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டு வழக்கு விசாரணையை உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு மாற்ற வேண்டும் என மனுதாரர்
தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனால், மனு தாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும், வழக்கு தொடர்பான விசாரணை அலகாபாத் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

மேலும், இவ்வழக்கை உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றும் அவசியம் தற்போது இல்லை எனவும், தேவைப்பட்டால் சிபிஐ விசாரணை முடிவடைந்த உடன் வழக்கை டெல்லிக்கு மாற்றுவது தொடர்பாக உரியமுடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.         
Tags:    

Similar News