செய்திகள்
இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 108 விநாயகர் சிலைகள்.

முதல்-அமைச்சர் வாழ்த்து சொல்லாததை கண்டிப்பதாக காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி

Published On 2021-09-10 08:23 GMT   |   Update On 2021-09-10 08:23 GMT
காவல்துறையினர் அனுமதி மறுத்து வீட்டுக்குள் இருக்கிற விநாயகர் சிலைகளை வெளியில் எடுத்து வந்து உடைக்கின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர்-தாராபுரம் ரோடு சந்திராபுரம் பிரிவில் இந்து முன்னணி சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சிலை மற்றும் 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் இன்று நடைபெற்றது.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சாமிகள் யாக பூஜைகளை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் இந்துமுன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:

விநாயகர் சதுர்த்தியை நாடு முழுவதும் கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள். பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளோடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காவல்துறையினர் அனுமதி மறுத்து சில இடங்களில் வீட்டுக்குள் இருக்கிற விநாயகர் சிலைகளை வெளியில் எடுத்து வந்து உடைத்து வருகின்றனர். 

மதச்சார்பற்ற அரசாக இருக்க செயல்பட வேண்டும். இல்லையேல் மக்களிடம் பெரிய கொந்தளிப்பை  எதிர்கொள்ள வேண்டி இருக்கும். கட்சியின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கான காரியங்களை செய்ய வேண்டும். ஆனால் எதிர்ப்பை  கொண்டு வருகிறது. 

தமிழகம் முழுவதும் வீடுகளில் 10 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு தமிழக முதல்வரும் அந்த கட்சியினரும் வாழ்த்து சொல்லாததை கண்டிக்கிறோம்.

மற்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லி விட்டு இந்த பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாததை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என்றார். 

இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி, கிஷோர் குமார், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News