செய்திகள்
மரணம்

குழிக்குள் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கி 2 வயது குழந்தை மரணம்

Published On 2020-10-31 09:39 GMT   |   Update On 2020-10-31 09:39 GMT
பெங்களூருவில் ‘லிப்ட்‘ அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலியான பரிதாபம் நடந்துள்ளது. இதுதொடர்பாக உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:

பெங்களூரு கெங்கேரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோடிபாளையா பகுதியில் புதிதாக 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் ரமேஷ் என்பவருக்கு சொந்தமானதாகும். அந்த கட்டிடத்தின் அருகேயே ஏராளமான தொழிலாளர்கள் சிறிய குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். அதுபோல, கொப்பல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியும் அங்கு ஒரு குடிசையில் வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு 2 வயதில் வினோத் என்ற குழந்தை இருந்தது.

குழந்தையின் தந்தை தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் அவர் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டார். குழந்தையின் தாயும் காலையில் குளிப்பதற்காக சென்றிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் வீட்டு முன்பு நின்று விளையாடிய குழந்தை வினோத் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்குள் சென்று விட்டது. அங்கு ‘லிப்ட்‘ அமைப்பதற்காக 6 அடி ஆழ குழி தோண்டப்பட்டு இருந்தது. அந்த குழிக்குள் தண்ணீர் தேங்கி கிடந்தது.

இந்த நிலையில், கட்டிடத்திற்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாக குழிக்குள் தவறி விழுந்தது. இதனால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக குழந்தை இறந்து விட்டது. குழந்தையை காணவில்லை என்று தாய் தேடி பார்த்த போது, குழிக்குள் உள்ள தண்ணீருக்குள் குழந்தை இறந்து கிடப்பது தெரியவந்தது. தனது குழந்தையின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். தகவல் அறிந்ததும் கெங்கேரி போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது ‘லிப்ட்‘ அமைக்க தோண்டப்பட்ட குழிக்குள் தேங்கி கிடந்த தண்ணீரில் எதிர்பாராத விதமாக குழந்தை தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து கெங்கேரி போலீசார் கட்டிட உரிமையாளர் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News