ஆட்டோமொபைல்
யமஹா எப்.இசட். எக்ஸ்

யமஹா எப்.இசட். எக்ஸ் பைக் வாங்கலாமா? விரிவான அலசல்

Published On 2021-09-06 09:27 GMT   |   Update On 2021-09-06 09:40 GMT
யமஹா நிறுவனத்தின் எப்.இசட். எக்ஸ் கிராஸ் ஓவர் மோட்டார்சைக்கிள் 150 சிசி பிரிவில் விற்பனை செய்யப்படுகிறது.


இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 18 ஆம் தேதி யமஹா தனது எப்.இசட். எக்ஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. யமஹாவின் எப்.இசட். சீரிசை தழுவி புதிய எப்.இசட். எக்ஸ் இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

இது யமஹா நிறுவனத்தின் ரெட்ரோ தோற்றம் கொண்ட ஸ்கிராம்ப்ளர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். புதிய எப்.இசட். எக்ஸ் மாடலை சில நாட்கள் பயன்படுத்தினோம். இந்த மாடல் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கிறது என விரிவாக பார்ப்போம்.



யமஹா எப்.இசட். எக்ஸ் அம்சங்கள்:

பவர் டிரெயின் - 149சிசி, சிங்கில் சிலிண்டர்
திறன் - 7250 ஆர்.பி.எம்.-இல் 12 பி.ஹெச்.பி. 
இழுவிசை - 5500 ஆர்.பி.எம்-இல் 13.3 நியூட்டன் மீட்டர்
டிரான்ஸ்மிஷன் - 5 ஸ்பீடு 
சேசிஸ் - டைமண்ட்
டையர்கள் முன்புறம் / பின்புறம் - 100/80 R17 / 140/60 R17 
வீல்பேஸ் - 1330 மில்லிமீட்டர்
கிரவுண்ட் க்ளியரன்ஸ் - 165 மில்லிமீட்டர்
சீட் உயரம் - 810 மில்லிமீட்டர்
எடை - 139 கிலோ
பியூவல் டேன்க் கொள்ளளவு - 10 லிட்டர்

டிசைன்:

தோற்றத்தில் இந்த மோட்டார்சைக்கிள் எப்.இசட். மாடலை விட மிகவும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது. முன்புறம் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள். இந்த பைக்கிற்கு ரெட்ரோ தோற்றத்தை கொடுக்கிறது. இதன் பியூவல் டேன்க் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இதன் கீழ்புறம் காஸ்மெடிக் அழகை கூட்ட ரேடியேட்டர் ஷிரவுட்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புற பூட்-பெக் சற்றே உயரமாக பொருத்தப்பட்டுள்ளது. 

இதன் பின்புறம் மெல்லிய எல்.இ.டி. டெயில் லேம்ப், மிக எளிமையான கிராப் ரெயில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் புதிய எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போன் செயலியில் மோட்டார்சைக்கிளின் விவரங்களை அறிந்துகொள்ளலாம். 



ஸ்மார்ட்போனில் யமஹாவின் வை கனெக்ட் செயலி இன்ஸ்டால் செய்து, பார்க்கிங் லொகோட்டர், சர்வீஸ், ஆயில் மாற்றுவதற்கான நினைவூட்டிகள், என்ஜின் ஆர்.பி.எம். போன்ற விவரங்களை பார்க்கலாம். இதன் எல்.சி.டி. டிஸ்ப்ளே பகல் மற்றும் இரவு நேரங்களில் எவ்வித சிரமமும் இன்றி பைக்கின் வேகம், மற்றும் இதர விவரங்களை காண்பிக்கிறது.

இத்துடன் எப்.இசட். எக்ஸ் மாடலில் 12 வோல்ட் திறன் கொண்ட பவர் அவுட்லெட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயணங்களின் போது ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும். யமஹாவின் புதிய எப்.இசட். எக்ஸ் மேட் காப்பர், மெட்டாலிக் புளூ மற்றும் மேட் பிளாக் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. 



செயல்திறன்:

யமஹா எப்.இசட். எக்ஸ் மாடலில் 149சிசி, ஏர் கூல்டு, 2 வால்வு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 12.4 பி.ஹெச்.பி. திறன், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. 150சிசி என்ஜின் பிரிவில் இது குறைந்த செயல்திறன் என்ற போதும், மணிக்கு 0-60 கிலோமீட்டர் வேகத்தை எப்.இசட். எக்ஸ் 4 நொடிகளில் எட்டிவிடுகிறது. 

துவக்கத்தில் வேகம் சிறப்பாக இருந்தாலும், எப்.இசட். எக்ஸ் திறன், எப்.இசட். மாடலுடன் ஒப்பிடும் போது குறைவு தான். நகர்புற பயன்பாட்டிற்கு எப்.இசட். எக்ஸ் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. வேகத்தை பொறுத்தவரை மணிக்கு 85 முதல் 90 கிலோமீட்டர் வரை சீராக செல்கிறது. இந்த மாடல் திறன், பயணங்களை அனுபவிக்க செய்கிறது.

இதன் எக்சாஸ்ட் சவுண்ட் வழக்கமான எப்.இசட். மாடலில் இருப்பதைவிட வித்தியாசமாகவும், சிறப்பானதாகவும் இருக்கிறது. நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, என்ஜின் இயக்கம் சமமாக இருக்கிறது. மொத்தத்தில் யமஹா எப்.இசட். எக்ஸ் நகர்ப்புறம் மற்றும் நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு ஏற்றதாக இருக்கிறது.



ரைட் மற்றும் ஹேண்ட்லிங்:

யமஹா தனது எப்.இசட். எக்ஸ் மாடலில் சவுகரிய அனுபவத்தை வழங்கும் வகையில் சிறப்பாக வடிவமைத்து இருக்கிறது. எப்.இசட். எக்ஸ் மாடலில் உயரமான ஹேண்டில்பார், முன்புற பூட் பெக், அகலமான இருக்கை பயணத்தின் இனிமையை உணர செய்கிறது. இதன் சீட் உயரம் தரையில் இருந்து 810 மில்லிமீட்டர் அளவில் உள்ளது. இது எப்.இசட். மாடலை விட 4 கிலோ அதிக எடை கொண்டுள்ளது. புதிய எப்.இசட். எக்ஸ் மொத்த எடை 139 கிலோ ஆகும். 

இதில் உள்ள பியூவல் டேன்க், ரேடியேட்டர் ஷிரவுட்கள், முன்புற மட்-கார்டு, ஹெட்லேம்ப் பிராகெட், மெல்லிய பேஷ் கார்டு உள்ளிட்டவை மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் எம்.ஆர்.எப். டூயல்-பர்பஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை சாலைகளில் சிறப்பாகவே செயல்படுகின்றன. எனினும், இவற்றுக்கு அதிக சிரமம் கொடுக்காமல் இருப்பது நல்லது.

யமஹா எப்.இசட். எக்ஸ் மாடலில் பிரேக்கிங் சிறப்பாகவே இருக்கிறது. பின்புறம் ஸ்டாண்டர்டு டிஸ்க், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்கிராம்ப்ளர் போன்ற தோற்றம் கொண்டிருக்கும் எப்.இசட். எக்ஸ் ஆப்-ரோடு அனுபவம் எப்.இசட். மாடலை போன்றே இருக்கிறது. 



புதிய எப்.இசட். எக்ஸ் சஸ்பென்ஷன் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் எப்.இசட். மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. எனினும், கூடுதல் க்ரிப் கொண்ட டையர்கள் சகதி நிறைந்த சாலைகளில் சிறந்த கண்ட்ரோல் கொடுக்கிறது. யமஹா எப்.இசட். எக்ஸ் லிட்டருக்கு 47 முதல் 50 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குவது, இதனை தேர்வு செய்ய மற்றொரு முக்கிய காரணமாக உள்ளது.

இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய யமஹா எப்.இசட். எக்ஸ்- வாடிக்கையாளர்களுக்கு என்ட்ரி லெவல் ரெட்ரோ ஸ்கிராம்ப்ளர் அனுபவத்தை நிச்சயம் கொடுக்கிறது. எனினும், இந்த மாடலின் பின்புற தோற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
Tags:    

Similar News