சிறப்புக் கட்டுரைகள்
கருணை தெய்வம் காஞ்சி மகான்

கருணை தெய்வம் காஞ்சி மகான் - ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

Published On 2021-12-01 12:10 GMT   |   Update On 2021-12-01 12:10 GMT
கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
குரு பக்தி என்பது முழுக்க முழுக்க நம்பிக்கை தொடர்பானது.
தான் வணங்குகிற குருவிடம் எந்த அளவுக்கு நம்பிக்கை கொண்டு ஒரு பக்தர் உளமார பிரார்த்திக்கிறாரோ, அதற்கு ஏற்றாற் போல்தான் பலனும் கிடைக்கும்.
ஒரு கடையில் நீங்கள் பத்து ரூபாய் கொடுத்தால், பத்து ரூபாய்க்கு உண்டான பொருள்தான் கிடைக்கும்.நூறு ரூபாய் கொடுத்தால், அதற்கு உண்டான பொருள் கிடைக்கும்.

நாமெல்லாம் எப்படித் தெரியுமா? பத்து ரூபாயைக் கொடுத்து விட்டு நூறு ரூபாய்க்கு உண்டான பொருளைக் கேட்கிறோம்.
 கடைக்காரரிடம் கேட்டால், கட்டையை எடுத்து விடுவார். குருநாதர் அப்படிக் கேட்க மாட்டார் என்பதால், ‘எல்லா பிரார்த்தனையும் செஞ்சேன். ஆனால், என்னோட வேண்டுதல் நிறைவேறலை’ என்று குறை சொல்கிறோம்; பிறரிடம் பொருமுகிறோம்.

உண்டா, இல்லையா?

நமது பிரார்த்தனை நிறைவேறவில்லை என்றால், தெய்வங்களையும் மகான்களையும் குறை சொல்கிறோமே தவிர, நம் பிரார்த்தனையில் பரிபூரண ஆத்மார்த்தம் இல்லை என்பதை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உணர்வதில்லை. நம்மில் பலர் ‘ஆற்றில் ஒரு கால்... சேற்றில் ஒரு கால்’ ரகம்!
இப்போது நாம் பார்க்கப் போகிற ஒரு சம்பவம், எந்த அளவுக்கு குருவின் மீது நம்பிக்கை வைத்தால் அவரது அனுக்ரகம் பரிபூரணமாக நமக்குக் கிடைக்கும் என்பதைப் பற்றியது.
இந்தச் சம்பவம் 1970-&களில் நடந்த ஒன்று.

சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு நான்கு குழந்தைகள். மூத்தவள் பெயர் கதம்பம். இவருக்கு அடுத்து மூன்று சகோதரர்கள்.மூத்த பெண்ணாக இருந்த காரணத்தால், கதம்பத்துக்குக் குடும்பப் பொறுப்பு அப்போதே சேர்ந்து கொண்டது. கதம்பத்தின் தாயார் உடல்நிலையில் அப்போது ஒரு பிரச்சினை. லட்சுமிகுமாரி என்ற மருத்துவரிடம் சென்றார்கள்.

பரிசோதித்துப் பார்த்தார். கருப்பையில் ஒரு கட்டி இருப்பதாகவும், அதில் புற்றுநோய்க்கான அடையாளங்கள் இருப்ப தாகவும் சொன்னார் டாக்டர் லட்சுமிகுமாரி.  
அதிர்ந்து போனது குடும்பம். குடும்பத் தலைவருக்கு என்ன பிரச்சினை என்றாலும், சமாளித்து விட முடியும். அதே வேளையில் குடும்பத் தலைவிக்கு ஒரு பிரச்சினை என்றால், அந்தக் குடும்பமே நிலைகுலைந்து விடும்.

கதம்பத்தின் குடும்பமும் அப்படித்தான் ஆனது. ‘அடுத்து என்ன செய்யலாம்’ என்று குடும்பமும் உறவும் உட்கார்ந்து பேசியது.
இதை அடுத்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் கதம்பத்தின் தாயார் அனுமதிக்கப்பட்டார்.
‘அறுவை சிகிச்சை செய்வதுதான் ஒரே வழி... அதுவும் தாமதம் செய்யக் கூடாது’ என்று மருத்துவர்களால் தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த நாளே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள்.

சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யலாம். நாள் குறிக்கப்படலாம். ஆனால், அவை எல்லாம் பலன் உள்ளதாக இருக்க வேண்டும் அல்லவா? இவை எல்லாம் விதி தொடர்பானது; மற்றும் குருவருள் தொடர்பானது.கதம்பம் அப்போது எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். ‘தாயார் நல்லபடியாக மீண்டும் வர வேண்டும்’ என்று மகா பெரியவாளைப் பிரார்த்தித்து வந்தார்.அடுத்த நாள் அறுவை சிகிச்சை தொடங்கியது. ஆனால், அறுவை சிகிச்சைக்கான நேரம் என்று குறிப்பிட்டிருந்த நேரத்தை விட வெகு சீக்கிரமாகவே வெளியே வந்து விட்டார்கள் மருத்துவர்கள்.

‘அதற்குள் ஆபரேஷன் முடிந்து விட்டதா?’ என்று திகைப்புடன் கதம்பமும் அவரது தந்தையும் மருத்துவர்கள் குழுவை நோக்கி நடந்தார்கள்.
தலைமை மருத்துவர் எதுவும் பேசாமல் இவர்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்துச் சென்றார். இருவரையும் அமரச் சொன்னார். எதுவும் பேசாமல் டாக்டர் அமைதியாக இருந்தால் என்ன தோன்றும்? பதைபதைப்புடன் கதம்பம்தான் கேட்டார்: ‘‘டாக்டர்... என்ன ஆச்சு? எங்கம்மாவுக்கு ஆபரேஷன் நல்லபடியா முடிந்ததா?’’
இருவரையும் உற்றுப் பார்த்த டாக்டர் பேசினார்: ‘‘ஆபரேஷன் பண்ணலாம்னுதான் உங்க அம்மா உடம்பை ஓப்பன் பண்ணினோம். ஆனால், உடனடியாகவே தையல் போட்டு மூடி விட்டோம். காரணம், கருப்பையில் துவங்கிய புற்றுநோய் தற்போது பல இடங்களிலும் பரவி இருப்பதைக் கண்டுபிடித்தோம். இந்த நிலையில் உங்கள் தாயாருக்கு ஆபரேஷன் செய்வது வீண். அவர் இப்போது மோசமான நிலையில் இருக்கிறார் என்றார்.

கதம்பமும் அவரது அப்பாவும் அழுதே விட்டார்கள். ஒரு கட்டத்தில் முகத்தைத் துடைத்துக் கொண்ட கதம்பம், ‘‘டாக்டர்... என் அம்மா பிழைப்பதற்கு வழி இல்லையா?’’ என்று துக்கம் தொண்டையை அடைக்கக் கேட்டார்.மருத்துவர்களும், வக்கீல்களும் உள்ளது உள்ளபடியே சொல்ல வேண்டும். அதுதான் வாடிக்கையாளர்களுக்கு நல்லது.இருப்பதை அப்படியே சொல்வதை விட்டு விட்டு, வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக உண்மைக்குப் புறம்பாகக் கூறக் கூடாது.இந்தத் தலைமை மருத்துவரும் அதே ரகம்தான்!

தன் எதிரே இருக்கும் இருவரையும் பார்த்துச் சொன்னார்: ‘‘நாளை காலை பத்தரை மணி வரைதான் உங்கள் தாயாரின் உடலில் உயிர் இருக்கும். அதன்பிறகு அவர் இறந்து விடுவார் என்பது எங்களது கணிப்பு. எனவே, மனதைத் தேற்றிக் கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசியுங்கள். உங்கள் உறவினர்களுக்கு இப்போதே தகவல் சொல்லி விடுங்கள் என்றார்.கதம்பம் பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்து விட்டார். இத்தனை சின்ன வயதில் தன்னையும், தன் கீழே மூன்று தம்பிகளையும் விட்டு விட்டு அம்மா பிரியப் போகிறார் என்றால், அது ஏற்கக் கூடியதா?அருகே அமர்ந்திருந்த கதம்பத்தின் தந்தையார் ஆறுதல் படுத்தினார். ‘‘நாம வெளில போய் என்ன பண்றதுனு பேசுவோம்’’ என்று மகளை ஆறுதல்படுத்தினார். டாக்டருக்குக் கைகளைக் கூப்பி நன்றி சொன்னார்.
இருவரும் வெளியே வந்தார்கள்.கதம்பத்தின் தந்தையார், மகளை அரவணைத்துத் தேற்றினார்.

பிறகு, சொன்னார்: ‘‘அம்மாவுக்கு டைம் பிக்ஸ் பண்ணிட்டாங்க டாக்டர்ஸ். ஆனா, நம்ம எல்லாருக்கும் மேலே ஒரு டாக்டர், காஞ்சிபுரத்துல இருக்கார். அவர்தான் நமக்கு நடமாடும் தெய்வம். நாம ரெண்டு பேரும் இப்பவே காஞ்சிபுரம் போறோம். மகா பெரியவாளைத் தரிசிக்கறோம். அந்த மகானிடம் பிரார்த்தனை பண்ணுவோம் என்று கூறினார்.அதுவரை கண்கள் கலங்கிக் காணப்பட்ட கதம்பம், முகத்தைத் துடைத்துக் கொண்டார். ‘மகா பெரியவா’ என்ற பெயரைச் சொன்னதும், அவரிடமும் ஒரு நம்பிக்கை வந்தது.அடுத்த கணம் இருவரும் பேருந்து ஏறி, காஞ்சிக்குப் பயணப்பட்டனர்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொண்டு அங்கிருந்து ஸ்ரீமடத்துக்கு நடந்தனர்.லோகமாதாவும் ஜகத்குருவுமான பெரியவா ஒரு ஆசனத்தில் வீற்றிருந்தார். சாட்சாத் கயிலைவாசனையே தரிசிப்பது போல் இருந்தது.குறைந்த அளவிலான பக்தர்களே அன்று காணப்பட்டனர்.கதம்பமும் அவரது தந்தையாரும் உள்ளே சென்றனர். இருவரும் நமஸ்கரித்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகம் இல்லை என்பதால், பெரியவாளின் அருகே சென்றார் கதம்பத்தின் தந்தையார்.புன்னகை முகத்துடன் கருணை பொங்க மகான் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து கொண்ட தந்தையார் உணர்ச்சிவசப்பட்டார்.

‘‘பெரியவா... எனக்கு ஏன் இந்த சோகம்? என்னோட மனைவி உயிர் பிழைக்க மாட்டாள்னு மருத்துவமனைல சொல்லிட்டா. நேரமும் பிக்ஸ் பண்ணிட்டா. அவ இல்லாம என்னால வாழ முடியாது பெரியவா. எனக்கு நான்கு குழந்தைகள். இவதான் மூத்தவ கதம்பம். இவளுக்கு அடுத்து மூணு பேரும் ஆண் குழந்தைகள். அவ இல்லாமல் என்னால இவர்களை வளர்க்க முடியுமா பெரியவா? அவ இல்லாம என்னால வாழ முடியாது பெரியவா’’ என்று அதற்கு மேல் பேச முடியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டார். தந்தையார் இப்படி அழுவதைப் பார்த்த கதம்பம், அவரைத் தேற்றினார்.

ஸ்ரீமடத்தில் பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்கிற சீடர்கள், கதம்பத்தின் தந்தை அருகே வந்தனர். ‘‘பெரியவா சந்நிதில இப்படி அழக் கூடாது. சொல்ல வந்ததை அழாம சொல்லுங்கோ’’ என்று மென்மையான குரலில் சொன்னார்கள் கைங்கர்யம் செய்கிறவர்கள். அடுத்து நடந்த அதிசயம் என்ன?
Tags:    

Similar News