செய்திகள்
இரட்டை சதமடித்த அபித் அலி

அபித் அலி இரட்டை சதமடித்து அபாரம் - பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 510/8

Published On 2021-05-08 21:30 GMT   |   Update On 2021-05-08 21:30 GMT
அபித் அலி இரட்டை சதமடித்து அசத்த, ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 510 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
ஹராரே:

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி டி 20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
 
பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹராரேயில் நேற்று முன்தினம் தொடங்கியது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 90 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்துள்ளது. அபித் அலி 118 ரன்னுடனும், சஜித் கான் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

அசார் அலி 126 ரன்னில் ஆட்டமிழந்தார். அபித் அலி, அசார் அலி ஜோடி 236 ரன்கள் குவித்தது.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. 118 ரன்னுடன் களத்தில் நின்ற அபித் அலி சிறப்பாக விளையாடி இரட்டை சதமடித்து அசத்தினார்.

சஜித் கான்20 ரன், ரிஸ்வான் 21 ரன், ஹசன் அலி ரன் எடுக்காமல் அவுட்டாகினர்.



அடுத்து இறங்கிய நவ்மன் அலி கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடினார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 97 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 147.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 510 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அபித் அலி 215 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஜிம்பாப்வே சார்பில் முசாராபனி 3 விக்கெட்டும், சிசோரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஜிம்பாப்வே அணியினரின் முன்னணி வீரர்களை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினர்.

இரண்டாம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 30 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 52  ரன்கள் எடுத்துள்ளது. சகாப்வா 28 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
Tags:    

Similar News