உள்ளூர் செய்திகள்
போராட்டடத்தில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

கோவிலுக்கு உரிமை கோருவதில் இருதரப்பினர் மோதல்

Published On 2022-01-13 09:10 GMT   |   Update On 2022-01-13 09:10 GMT
அறந்தாங்கி அருகே கோவிலுக்கு உரிமை கொண்டாடுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மாங்குடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் அதனைச் சுற்றியுள்ள மாங்குடி, இடைவிரியேந்தல், சேதுராயனேந்தல் கொன்னாடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வழிபாடு செய்து வருகின்றனர். 

ஆண்டுதோறும் வைகாசி மாதத்திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இக்கோவிலில் உரிமை கோருவது தொடர்பாக கோவில் நிர்வாகி ரெங்கசாமி தரப்பினருக்கும், சுந்தர்ராஜ்  தரப்பினருக்கும் மோதல் இருந்து வருகிறது.

இந்த மோதலால் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக திருவிழா நடத்தப்படாமல் உள்ளது. மேலும் இது தொடர்பாக கடந்த 7 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

இதில் உடன்பாடு எட்டப்படாததால் இரு தரப்பும் கலைந்து சென்றனர். இந்நிலையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள மோதலை தடுக்க இந்து சமய அறநிலைய துறை சார்பில் கோவிலை கையகப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

அதற்காக இன்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் கோவிலுக்கு விரைந்தனர். அப்போது அங்கே காத்திருந்த கிராம மக்கள் 200 க்கும் மேற்பட்டோர் இரு தரப்புக்கும் உள்ள கருத்து வேறுபாட்டால் கோவிலை அறநிலையத் துறைக்கு ஒப்படைக்க முடியாது  என்று கூறி, அதிகாரிகளை உள்ளே விடாமல் கோவில் கோபுரத்தில் ஏறியும், கோவில் முன்பாக முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

அப்போது 10 க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் வேப்பிலையுடன் அருள் வந்து சாமியாடிதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தினை தொடர்ந்து கிராமத்தில் பதற்றம் நீடிப்பதால் காவல் துணைக்கண்காணிப்பாளர் தினேஷ் குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எதிர்வருகின்ற 10 தினங்களுக்குள் நீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கும் வரை, கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் முடிவால், பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.
Tags:    

Similar News